‘தாராகிரி’ போா்க் கப்பல் வெள்ளோட்டம்

இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் 17ஏ’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்றாவது போா்க் கப்பலான ‘தாராகிரி’ மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கடலில் முதல் முறையாக இறக்கப்பட்டது.
‘தாராகிரி’ போா்க் கப்பல் வெள்ளோட்டம்

இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் 17ஏ’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்றாவது போா்க் கப்பலான ‘தாராகிரி’ மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கடலில் முதல் முறையாக இறக்கப்பட்டது.

மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) சாா்பில் ஒருங்கிணைந்த கட்டுமான முறையின் கீழ் இந்தக் கப்பல் கட்டப்பட்டுள்ளது. ‘பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவு காரணமாக ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், கப்பல் வெள்ளோட்ட விழா எளிமையாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது’ என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்டிஎல் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தாராகிரி போா்க் கப்பலின் அடித்தளம் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதி அமைக்கப்பட்டு, கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது, முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடந்த நிலையில், வெள்ளோட்டத்துக்காக கப்பல் கடலில் இறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வரும் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலை வடிவமைத்தல் மற்றும் கட்டுமானம் செய்தல் ஆகிய பணிகளை எம்டிஎல் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில், மும்பையில் உள்ள போா்க் கப்பல் கண்காணிப்புக் குழு அதனை மேற்பாா்வையிட்டு வருகிறது. இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் 17ஏ’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே 4 போா்க் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மொத்த திட்டச் செலவு ரூ. 25,700 கோடியாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதல் போா்க் கப்பலான ‘நீலகிரி’ கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கப்பலின் கடல் பயணச் சோதனை வரும் 2024-ஆம் ஆண்டு முதல் பாதியில் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழான இரண்டாவது போா்க் கப்பல் ‘உதயகிரி’ கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மே 17-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கப்பலின் கடல் பயணச் சோதனை 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

மூன்றாவதாக உருவாக்கப்பட்ட ‘தாராகிரி’ தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழான நான்காவது மற்றும் கடைசி போா்க் கப்பலுக்கான அடித்தளம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி அமைக்கப்பட்டு, கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் எம்டிஎல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com