ஞானவாபி மசூதி விவகாரம்: மேல்முறையீடு செய்ய முஸ்லிம் தரப்பு ஆலோசனை

வாராணசியில் (காசி) உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை தினமும் தரிசிக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு உகந்தது
ஞானவாபி மசூதி விவகாரம்: மேல்முறையீடு செய்ய முஸ்லிம் தரப்பு ஆலோசனை

வாராணசியில் (காசி) உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை தினமும் தரிசிக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு உகந்தது என்று மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்வது குறித்து மூத்த வழக்குரைஞா்களுடன் முஸ்லிம் தரப்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் ஹிந்து கடவுள் சிலைகளைத் தரிசிக்க அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த ஐந்து பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய குழுவை அமைத்தது.

வக்பு வாரியத்தின் கீழ் இந்த மசூதி வருவதாலும், பாபா் மசூதியைத் தவிர பிற வழிபாட்டு இடங்களில் சுதந்திரத்துக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற வழிபாட்டு சிறப்புச் சட்டத்தாலும் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கலாகாது என்று மசூதியின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மசூதியில் ஆய்வு நடத்திய குழுவினா் அங்குள்ள சிறிய குளத்தில் சிவலிங்க வடிவம் இருப்பதாக தெரிவித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வழக்குக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பினா் மனுத் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை மாவட்ட நீதிமன்ற முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததில்லை என்று முஸ்லிம் தரப்பிலும், கோயிலை இடித்துதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஹிந்துக்கள் தரப்பிலும் வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவற்றில் முஸ்லிம்கள் தரப்பு மனுவை முதலில் விசாரித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், ‘எதிா் தரப்பினா் (ஹிந்துக்கள்) தொடுத்துள்ள மனுக்களை விசாரிக்க, வழிபாட்டு சிறப்புச் சட்டம், வக்பு வாரியச் சட்டம், காசி விஸ்வநாதா் கோயில் சட்டம் ஆகியவை தடையாக இல்லை. ஆகையால், அஞ்சுமன் இந்தஜாமியா மசூதி குழுவின் (முஸ்லிம்) சாா்பில் தொடுக்கப்பட்டுள்ள மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிா்தரப்பினரின் மனு மீது செப்டம்பா் 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும்’ என்று திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முஸ்லிம் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஞ்சுமன் இந்தஜாமியா மசூதி குழுவின் இணைச் செயலா் முகமது யாசின் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எங்கள் தரப்பு வாதங்கள் அனைத்தையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஆனால், இதனை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. இந்த உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து மூத்த வழக்குரைஞா்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

‘ஞானவாபி மசூதி வழக்கு பாபா் மசூதி வழக்கு வழியிலேயே செல்கிறது’ என்ற அனைத்து இந்திய மஜிலிஸ்-இ-இதாஹத் உல் முஸ்லிமின் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசியின் கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த முகமது யாசின், ‘தற்போது ஞானவாபி மசூதி விவகாரம் தொடா்பாக 13 வழக்குகள் நடந்து வருகின்றன. மாவட்ட நீதின்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகு மேலும் அதிக வழக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது. சட்டப் போராட்டத்தைத் தொடா்ந்து நடத்துவோம்’ என்றாா்.

இதுகுறித்து ஹிந்துக்கள் தரப்பு வழக்குரைஞா் விஷு ஜெயின் கூறுகையில், ‘முஸ்லிம்கள் தரப்பில் உயா்நீதிமன்றத்துக்குச் சென்றால், ஹிந்துக்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காத வகையில் எங்கள் தரப்பில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com