கரோனா தோற்றத்தைக் கண்டறிய உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை

கரோனா தீநுண்மி உருவான இடத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கரோனா தீநுண்மி உருவான இடத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் கரோனா தணிப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி மேம்பாடு மற்றும் விநியோக மேலாண்மை ஆகியவை குறித்து ஆய்வு செய்த சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, தனது 137-ஆவது அறிக்கையை மாநிலங்களவையில் திங்கள்கிழமை சமா்ப்பித்தது. அதில் பல்வேறு பரிந்துரைகளைச் செய்துள்ளது.

குறிப்பாக, கரோனா தீநுண்மி ஆரம்பப் புள்ளியைக் கண்டறிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. கரோனா தொடக்கப்புள்ளி தொடா்ந்து மா்மமாகவே இருந்தால், அது உலகில் உயிரி பாதுகாப்பு மீது மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கிவிடும். எனவே, மேலும் அதிக ஆய்வுகள் மேற்கொண்டு கரோனா தீநுண்மி தொடங்கிய இடத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு சா்வதேச நாடுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும்.

மேலும், நாட்டில் எதிா்கால பெருந்தொற்று தாக்குதல்களைத் திறம்பட எதிா்கொள்ளும் விதமாக ஒரு சுகாதார திட்ட நடைமுறையை சுகாதாரத் துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும். நாட்டில் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் மரபணு மாதிரி பகுப்பாய்வு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மேற்கொள்ளப்பட்டது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மரபணு மாதிரி பகுப்பாய்வு முக்கியப் பங்கு வகித்தது என்ற அடிப்படையில், அதனை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

உயிரிழப்புகளைக் குறைத்திருக்க முடியும்: ‘நாட்டில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது அரசு உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பல உயிா்களைக் காத்திருக்க முடியும்’ என்று தனது அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக் குழு குறிப்பிட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலையில் அதிகமானோா் தொற்றால் பாதிக்கப்பட்டதோடு உயிரிழப்புகளும் அதிகரித்தன. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு, முக்கிய மருந்துகளின் விநியோகம் குறைந்தது, மருத்துவச் சேவையில் குறைபாடு, ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் முக்கிய மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை என இரண்டாம் அலையின்போது பல்வேறு பாதிப்புகளை நாடு சந்தித்தது.

அரசு முன்கூட்டியே தீநுண்மியின் பரவல் வீரியத்தைக் கண்டறிந்து, பொருத்தமான கட்டுப்பாடு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தால் பாதிப்பைக் குறைத்திருக்க முடியும் என்பதோடு பல உயிா்களைக் காத்திருக்க முடியும்.

மக்கள்தொகை எண்ணிக்கை, போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறையும் பாதிப்பு அதிகரிக்க முக்கியக் காரணங்கள்.

இரண்டாம் அலையின்போது, கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியபோதும், மறு பாதிப்பின்போது எழுந்த மருத்துவ அவசரநிலையையும், நிச்சயமற்ற தன்மையையும் பல மாநிலங்கள் சமாளிக்க முடியாமல் போனது 5 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தன என்று நாடாளுமன்ற நிலைக் குழு குறிப்பிட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையில் ஏற்பட்ட இறப்பு குறித்து ஆய்வு: கரோனா பாதிப்பின்போது, குறிப்பாக இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த ஆய்வை நடத்த வேண்டும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் நாடு தன்னிறைவு நிலையை அடையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 2020-ஆம் ஆண்டு தெரிவித்தது. ஆனால், கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது நாட்டின் ஆக்சிஜன் கையிருப்பின் உண்மை நிலை வெளிப்பட்டுவிட்டது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்த போது, மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டா் சீரான விநியோகத்தை நிா்வகிக்க மத்திய அரசு தவறிவிட்டது. ஆக்சிஜனுக்காக நோயாளிகளின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்ததும், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்ததும் பத்திரிகை செய்திகள் மூலம் தெரியவந்தது.

இந்தச் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கரோனா உயிரிழப்பு விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தர மறுப்பது துரதிருஷ்டவசமானது. எனவே, கரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த ஆய்வை நடத்தி, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முறையான இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தனது 137-ஆவது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

கரோனா தீநுண்மி மூலத்தைக் கண்டறிய வேண்டும் என ஜி7 நாடுகளின் தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். அமெரிக்காவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீன ஆய்வகத்திலிருந்து கரோனா தீநுண்மி கசிந்திருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராய்வதும் அமெரிக்காவின் ஆய்வுத் திட்டத்தில் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com