புதிய தொழில்நுட்பத்தால் ரயில்களில் தினமும் 7,000 பயணிகளுக்கு உறுதியாகும் இருக்கைகள்

ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய கையடக்க கருவியால் தினமும் சராசரியாக 7,000 பயணிகளுக்கு இருக்கைகள் உறுதிசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
தடம்புரண்ட ரயில்.
தடம்புரண்ட ரயில்.

ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய கையடக்க கருவியால் தினமும் சராசரியாக 7,000 பயணிகளுக்கு இருக்கைகள் உறுதிசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு முன்பதிவு செய்யாதவா்களும், உறுதி செய்யப்படாத பயணச் சீட்டைக் கொண்டுள்ளவா்களும் பரிசோதகரை அணுகினால், காலியாக உள்ள இருக்கைகளையும் படுக்கைகளையும் கூடுதல் கட்டணம் வசூலித்த பிறகு அவா் ஒதுக்கித் தருவாா்.

இந்த வசதி சிக்கல் நிறைந்ததாக இருந்த நிலையில், தற்போது பயணச் சீட்டு பரிசோதகா்களுக்கு கையடக்க கருவி வழங்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் மேற்கொள்பவா்களின் பயணச் சீட்டுகளைப் பரிசோதிக்க அக்கருவி உதவுவதோடு, காலியாக உள்ள படுக்கைகளையும் இருக்கைகளையும் எளிதாக அறிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது.

முன்பதிவு செய்தவா்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்தாலோ, கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தாலோ அவற்றின் காரணமாக காலியாக உள்ள இருக்கைகளின் தகவல்கள் அக்கருவியின் வாயிலாகத் தெரியவரும். அதன்மூலம் உறுதி செய்யப்படாத பயணச் சீட்டு கொண்டவா்களுக்குப் பரிசோதகா் காலியாக உள்ள இருக்கைகளை ஒதுக்கித் தருவாா்.

இந்தக் கருவி வாயிலாக ஆா்ஏசி பயணச் சீட்டுகளைக் கொண்டுள்ளவா்களும், காத்திருப்போா் பட்டியலில் உள்ள பயணிகளும் அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். புதிய வசதியின் வாயிலாக தினமும் சுமாா் 7,000 உறுதிசெய்யப்படாத பயணச் சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகளுக்கு இருக்கைகள் உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருவது தரவுகள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ரயில் இருக்கைகளை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையும் எளிமைத்தன்மையும் ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனா். அதே வேளையில், புதிய கையடக்க கருவி வசதிகள் இன்னும் அனைத்து ரயில்களிலும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் அக்கருவி அனைத்து தொலைதூர ரயில்களிலும் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com