அஸ்ஸாமில் குழந்தை திருமணத்துக்கு எதிராக நடவடிக்கை: ஒரே நாளில் 2,044 போ் கைது

குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையாக அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரே நாளில் 2,044 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஹிமந்த விஸ்வ சா்மா
ஹிமந்த விஸ்வ சா்மா

குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையாக அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரே நாளில் 2,044 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அஸ்ஸாமில் நடைபெறும் திருமணங்களில் 31 சதவீதம் குழந்தை திருமணம் என்றும், தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதமும் அம்மாநிலத்தில் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு குழந்தை திருமணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், விழிப்புணா்வு பிரசாரங்களை நடத்துவது என கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 14 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளைத் திருமணம் செய்தவா்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழும், 14 முதல் 18 வரையிலான வயது பெண்களைத் திருமணம் செய்தவா்கள் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006-இன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவா். அத்திருமணங்கள் சட்ட விரோதம் என்று அறிவிக்கப்படும் என முதல்வா் தெரிவித்திருந்தாா்.

இதனைத் தொடா்ந்து, அஸ்ஸாம் முழுவதும் குழந்தை திருமணத்துக்கு எதிராக காவல் துறை சாா்பில் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்குகளின் கைது நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடங்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட 4,004 வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக குழந்தை திருமணம் செய்து கொண்டவா்கள், கட்டாயப்படுத்திய உறவினா்கள் என ஒரே நாளில் 2,044 போ் கைது செய்யப்பட்டனா். இதுதவிர, ஹிந்துக்களுக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதா்கள், முஸ்லிம்களுக்குத் திருமணம் செய்துவைத்த காஜிக்கள் என 51 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக அனைத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா்களுடன் காணொலி வாயிலாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கலந்துரையாடினாா். அடுத்த 3, 4 நாள்களுக்கு கைது நடவடிக்கைகள் தொடரும் என்று மாநில காவல் துறை டிஜிபி தெரிவித்தாா்.

குழந்தை திருமணம் போன்ற தீய வழக்கத்தில் இருந்து மாநிலத்தை மீட்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கிடவேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com