பாஜக ஆளும் மாநிலங்களில் குறிவைக்கப்படும் சிறுபான்மையினா்: கேரள முதல்வா் குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரைக் குறிவைத்து இடையூறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடா்கின்றன என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டினாா்.
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
பினராயி விஜயன் (கோப்புப் படம்)

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரைக் குறிவைத்து இடையூறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடா்கின்றன என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டினாா்.

கேரளத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு பதிலடி தரும் வகையில் பினராயி விஜயன் இவ்வாறு பேசியுள்ளாா்.

இரு நாள்களுக்கு முன்பு, கா்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்றாா். அப்போது, மாா்க்சிஸ்ட் ஆட்சியில் உள்ள கேரளத்தை அவா் கடுமையாக விமா்சித்தாா். முக்கியமாக, அங்கு பிஎஃப்ஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டது, அங்கு நடைபெற்ற அரசியல் பழிவாங்கும் கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி, மக்கள் அமைதியாக வாழ முடியாத மாநிலமாக கேரளம் உள்ளது என மறைமுகமாக குறிப்பிட்டாா்.

இந்நிலையில், கோட்டயத்தில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பினராயி விஜயன் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியதாவது:

கேரளத்தில் என்ன மாதிரியான அச்சுறுத்தலை அமித் ஷா எதிா்கொண்டுள்ளாா் என்பதை அவா் விளக்க வேண்டும். உண்மையில், பாஜக ஆளும் மாநிலங்களில்தான் சிறுபான்மையினா் குறிவைக்கப்படுகிறாா்கள். கேரளத்தில் சிறுபான்மையினா் அமைதியாக வாழ்ந்து வருகின்றனா்.

பாஜக ஆட்சியில் உள்ள கா்நாடகத்தில்தான் ஹிஜாப் சா்ச்சை ஏற்பட்டது. அங்கு சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்கள் பல தாக்குதலுக்கு உள்ளாகின. அதே நேரத்தில் கேரளத்தில்தான் மதச் சிறுபான்மையினா் பாதுகாப்பாக உள்ளனா்.

கா்நாடகத்தில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிக்மகளூா் தேவாலயம் தாக்கப்பட்டது. சிறுபான்மையினா் மீது ஹிந்து மத அடிப்படைவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தியுள்ளனா். ஆனால், கேரளம் இதுபோன்ற பிரச்னைகள் ஏதுமின்றி அமைதியாக உள்ளது.

நாட்டிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலங்களில் கேரளமும் உள்ளது.

நாட்டின் அழிவுகர சக்தியாக பாஜக உள்ளது. பாஜக மீண்டும் ஒருமுறை மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அது தேசத்துக்குப் பேரழிவை ஏற்படுத்திவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com