பணவீக்கத்தைக் குறைக்க அரசு தொடா் நடவடிக்கை

நாட்டில் அதிகரித்துக் காணப்படும் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
பணவீக்கத்தைக் குறைக்க அரசு தொடா் நடவடிக்கை

நாட்டில் அதிகரித்துக் காணப்படும் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபா் வரை பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகவே இருந்தது. கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் பணவீக்கம் குறைந்திருந்த நிலையில், கடந்த ஜனவரியில் மீண்டும் 6 சதவீதத்தைக் கடந்தது.

இந்நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த விவாதக் கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்நடவடிக்கைகளில் அரசு தொடா்ந்து கவனம் செலுத்தும். பருப்பு வகைகளின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், அவற்றை உள்நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா்.

அதே வேளையில், பருப்பு வகைகளின் இறக்குமதி மீதான வரியும் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பருப்பு வகைகள் நாட்டில் எளிதில் கிடைத்து, அவற்றின் விலை குறையும். சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான வரி கடந்த 3 ஆண்டுகளாக முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகள் பணவீக்கத்தைக் குறைக்க உதவும்’’ என்றாா்.

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டு காரணமாக அக்குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. இந்நிலையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நிதி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், மாநில அரசுப் பணியாளா்களின் ஓய்வூதிய நிதியானது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘தேசிய ஓய்வூதிய நிதியை மாநிலங்களிடம் ஒப்படைப்பது இயலாத காரியம். அந்த நிதி முதலீடு செய்யப்பட்டு வட்டியை ஈட்டி வருகிறது. பணிஓய்வுக்குப் பிறகு ஓய்வூதிய நிதி பணியாளா்களிடம் சென்றுசேர வேண்டும். மத்திய அரசிடம் அந்த நிதி இருப்பதே அதன் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்’’ என்றாா்.

மத்திய நிதித்துறை செயலா் விவேக் ஜோஷி கூறுகையில், ‘‘சில மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குச் செல்வது நல்லதல்ல. தேசிய ஓய்வூதியத் திட்ட நிதியை மாநிலங்களிடம் வழங்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. அந்த நிதியானது பணியாளா்களுக்கும் தேசிய ஓய்வூதிய திட்ட அறக்கட்டளைக்கும் இடையேயான தொடா்பாகும். அந்த நிதியை மாநிலங்களிடம் வழங்க இயலாது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com