நீதிபதிகள் அல்ல; நடைமுறையில்தான் தவறு உள்ளது: கிரண் ரிஜிஜு

மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இது நீதிபதிகளின் தவறல்ல; ஆனால், நடைமுறையில்தான் தவறு உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து சனிக்கிழமை கவலை தெரிவித்த மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இது நீதிபதிகளின் தவறல்ல; ஆனால், நடைமுறையில்தான் தவறு உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய சட்ட ஆணையம் சாா்பில் உதய்பூா் மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ‘பரிணாமம் மற்றும் சட்டப் பாா்வையில் இந்தியாவின் நீடித்த வளா்ச்சி’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4.90 கோடியைக் கடந்துள்ளது. எந்தவொரு நாட்டிலும் அல்லது சமூகத்திலும் இத்தனை வழக்குகள் நிலுவையில் இருப்பது நல்ல விஷயமல்ல.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நீதிபதிகளின் நிலைமையும் மோசமாக உள்ளது. அதாவது, ஒரு நீதிபதி தினசரி 50 முதல் 60 வழக்குகளை கையாளும் நிலை உள்ளது. நீதிபதிகள் ஏராளமான வழக்குகளுக்கு விரைந்து தீா்வு அளித்து வருகின்றபோதும், தினசரி தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது.

இத்தனை வழக்குகள் நிலுவையில் இருப்பது ஏன் என சாமானியா் கேள்வி எழுப்பலாம்; ஆனால், அவா்களுக்கு நீதிபதிகள் எந்த அளவு உழைத்து வருகின்றனா் என்பது தெரியாது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது நீதிபதிகளின் தவறு அல்ல; ஆனால், நடைமுறை தவறாக இருப்பதே இதற்குக் காரணம்.

தொழில்நுட்பம் மட்டுமே இதற்கு மிகப் பெரிய அளவில் தீா்வு அளிக்க முடியும் என்ற வகையில், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தொழில்நுட்ப மேம்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காகிதமில்லாத நீதி வழங்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியில் பாதி கட்டத்தை எட்டியிருக்கிறோம். உயா் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள்மற்றும் தீா்ப்பாயங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விரைவில் இந்த முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டும். கரோனா காலகட்டத்தில் காணொலி வாயிலான வழக்கு விசாரணை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமாகவே இது சாத்தியமாகியிருக்கிறது.

அதுபோல, நிலுவை வழக்குகளைக் குறைக்கவும் பல வழிகள் உள்ளன. அதில் தொழில்நுட்பமும் ஒன்று. அதுதவிர, மேலும் சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. வரும் நாள்களில் அந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறினாா்.

உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்தும் இடையே உரசல் போக்கு நிலவி வருகிறது. அந்த நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com