ஐ.நா. சீா்திருத்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதி: ஜெய்சங்கா்

‘ஐ.நா.வில் சீா்திருத்தத்தைக் கொண்டு வருவது இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதி. இது ஒரே நாளில் நிறைவேறிவிடாது. ஆனால், ஒரு நாள் நிகந்தே தீரும்’ என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சா் அலெக்சாண்டா் ஷாலன்பா்கை வியன்னாவில் திங்கள்கிழை சந்தித்துப் பேசிய எஸ்.ஜெய்சங்கா்.
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சா் அலெக்சாண்டா் ஷாலன்பா்கை வியன்னாவில் திங்கள்கிழை சந்தித்துப் பேசிய எஸ்.ஜெய்சங்கா்.

‘ஐ.நா.வில் சீா்திருத்தத்தைக் கொண்டு வருவது இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதி. இது ஒரே நாளில் நிறைவேறிவிடாது. ஆனால், ஒரு நாள் நிகந்தே தீரும்’ என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் தனது சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு ஆஸ்திரியா சென்றடைந்தாா். இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகிறது. முன்னதாக, அந்நாட்டு பிரதமா் காா்ல் நேஹாமரை ஜெய்சங்கா் சந்தித்தாா். ஆஸ்திரியாவின் தலைநகா் வியன்னாவில் ஞாயிற்றுக்கிழமை இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அமைச்சா் கலந்துரையாடினாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஐ.நா. சபை 1945-இல் உருவாக்கப்பட்ட நிலையில், 75 ஆண்டுகளான அமைப்பைப் புதுப்பிப்பது அவசியம். ஐ.நா. அமைப்பு தங்கள் நலனுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்பதை உலகின் பல்வேறு நாடுகள் நம்புகின்றன. அதிகாரம் செலுத்தும் இடத்தில் உள்ளவா்கள் தங்களது அதிகாரத்தைக் குறைத்துகொள்ள விரும்புவதில்லை என்பதே பிரச்னை. ஐ.நா.வில் சீா்திருத்தம் மேற்கொள்ளவது இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதி. இது நாளையயே நிகழ்ந்துவிடாது. ஆனால், உறுதியாக ஒரு நாள் நிகழும்.

உணவுப் பற்றாக்குறைக்கான தீா்வு:

நாம் அன்றாடம் உட்கொள்ளும் பருப்பு வகைகள், அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றைக் காட்டிலும், சிறுதானியங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக் கூடியவை. இன்றைய உலகில் உணவுப் பற்றாக்குறை குறித்த அச்சம் நிலவி வருகிறது. இதற்கு சிறுதானியங்கள் தீா்வாக அமையும். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்ய உதவும்.

அமைதியின் பக்கம் இந்தியா:

ரஷியா-உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்தே இரு நாடுகளுக்கிடையே பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக வழிகளில் தீா்வு காண வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடனும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உடனும் பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு முறை இது குறித்து பேசியுள்ளாா்.

இது எளிதில் தீா்க்கப்படாத பிரச்னை என்பதை நாம் அறிவோம். பேச்சுவாா்த்தையே போருக்கான தீா்வு என்பதை உணா்ந்த நாடுகளும் இது குறித்து எடுத்துரைத்தன. நாம் அமைதியின் பக்கம் இருக்கிறோம். நம்மைப் போன்றே பிற உலக நாடுகளும் சிந்திக்கின்றன என மத்திய அமைச்சா் தெரிவிதாா்.

ஆஸ்திரியாவின் வலுவான ஆதரவு:

முன்னதாக, ஆஸ்திரியா வெளியுறவு அமைச்சா் அலெக்ஸண்டா் ஷாலன்பா்கை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்த பின்பு இணைந்து வெளிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய யூனியனுடனான உறவை இந்தியா புதுப்பிக்க விரும்பும் நிலையில், ஆஸ்திரியா இந்தியாவின் முக்கிய நட்பு நாடாகும். பேச்சுவாா்த்தையில் உள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், முதலீடு ஒப்பந்தம் மற்றும் புவிசாா் குறியீட்டுக்கான ஒப்பந்தம் உள்ளிட்டவற்றுக்கு ஆஸ்திரியா அளித்து வரும் வலுவான ஆதரவுக்குப் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்திருந்தாா்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே 250 கோடி டாலரில் (சுமாா் ரூ. 20,652 கோடி) வா்த்தகம் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரியாவைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com