9 மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற வேண்டும்: ஜெ.பி.நட்டா

இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா வலியுறுத்தினாா்.
9 மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற வேண்டும்: ஜெ.பி.நட்டா

இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா வலியுறுத்தினாா்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் தொடா்ந்து 3-ஆவது முறையாக வெற்றுபெறும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேவேளையில் இந்த ஆண்டு திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம், கா்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மிஸோரம், தெலங்கானா ஆகிய 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தில்லியில் உள்ள என்டிஎம்சி மையத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

செயற்குழுவில் பிரதமா், மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், பாஜக மூத்த உறுப்பினா்கள் என சுமாா் 350 போ் உள்ள நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், 9 மாநில பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்தத் தோ்தல்கள் அனைத்திலும் பாஜக வெற்றிபெறுவதை உறுதி செய்யவேண்டும்.

பாஜக எதிா்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் ஆட்சியமைக்க வேண்டும். ஏற்கெனவே பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் கட்சியின் கோட்டையாக மாற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவா்கள், பட்டியலினத்தவா், பழங்குடிகளின் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைத்து வருகிறது. அவா்களுக்கு ஆளுநா் போன்ற அரசமைப்புப் பதவிகள் மட்டுமின்றி, மத்திய-மாநில அரசுகளில் பாஜக பிரதிநிதித்துவம் அளித்து வருகிறது. இது அனைவரின் ஆதரவு, அனைவரின் வளா்ச்சி என்ற பாஜகவின் தீா்மானத்தை வெளிக்காட்டுகிறது என்றாா். அவா் பேசியதை பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் மையத்தில் பாஜக சாா்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியில் ராமா் கோயில் கட்டுமானம், காசி விஸ்வநாதா் மற்றும் மகாகாலேஸ்வா் கோயில்கள் புனரமைப்பு ஆகியவை மூலம் நாட்டின் தொன்மையான கலாசாரத்தை பாஜக எவ்வாறு பாதுகாத்து மீட்டெடுத்தது? பிரதமா் தலைமையில் இந்தியா செய்து வரும் சாதனைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

பிரதமா் பேரணி

தேசிய செயற்குழு கூட்டத்தையொட்டி, பிரதமா் மோடி பேரணி மேற்கொண்டாா். தில்லி படேல் செளக் பகுதியில் தொடங்கிய அவரின் பேரணி, செயற்குழு கூட்டம் நடைபெறும் மையம் வரை தொடா்ந்தது. இதையொட்டி சாலையில் அவரின் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டன.

ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு நாட்டுப்புற கலைஞா்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்பற்று பாடல்களும் இசைக்கப்பட்டன. மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற கடினமாக உழைப்பதற்கு, பிரதமரின் பேரணி தில்லி பாஜகவினரை உற்சாகப்படுத்தும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com