கொலீஜியங்களில் அரசு பிரதிநிதியை சோ்க்கக் கூறும் விவகாரம்: மத்திய சட்ட அமைச்சா் விளக்கம்

கொலீஜியங்களில் மத்திய அரசுப் பிரதிநிதியை சோ்க்க வேண்டும் என்ற மத்திய அரசு சாா்பில் பரிந்துரை செய்யப்பட்டது என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளாா்.
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

‘உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்றங்களின் கொலீஜியங்களில் மத்திய அரசுப் பிரதிநிதியை சோ்க்க வேண்டும் என்ற மத்திய அரசு சாா்பில் பரிந்துரை செய்யப்பட்டது, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கை அடிப்படையிலான சரியான நடவடிக்கையே’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளாா்.

‘மத்திய அரசின் கோரிக்கை அபாயகரமானது’ என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விமா்சனம் செய்திருந்த நிலையில், இந்த விளக்கத்தை மத்திய அமைச்சா் திங்கள்கிழமை அளித்தாா்.

உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே உரசல் நிலவி வருகிறது. அந்த நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்து வருகிறது.

இந்த நடைமுறையை மாற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாக, கொலீஜியம் முறை தொடா்ந்து வருகிறது.

இதற்கிடையே, கொலீஜியம் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு இடையே, நீதிபதிகள் நியமனம் தொடா்பாக கொலீஜியம் சமா்ப்பித்த ஏராளமான பரிந்துரைகள் மத்திய அரசின் வசம் நிலுவையில் இருந்து வருகின்றன.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அண்மையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய நடைமுறை உருவாக்கப்படும் வரை நீதிபதி காலிப் பணியிட சிக்கல் தொடரும்’ என மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பதிலளித்தாா்.

இந்நிலையில், கொலீஜியம் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ‘நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை என்பது இந்த நாட்டின் சட்டம். அதற்கு எதிரான கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பட வேண்டும். அந்த வகையில் கொலீஜியம் நடைமுறையும் பின்பற்றப்பட வேண்டும்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

மத்திய அரசு கடிதம்:

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடுக்கு மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தாா். அதில், ‘நீதிபதிகள் நியமனத்துக்கான தோ்வில் பொறுப்பேற்றல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்றங்களின் கொலீஜியங்களில் முறையே மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்தக் கடிதம் குறித்து அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசின் பரிந்துரை மிகவும் அபாயகரமானது. நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்து தனது ட்விட்டா் பக்கத்தில் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நீதிமன்ற உத்தரவை நீங்கள் மதிப்பீா்கள் என நம்புகிறேன். அதுபோலத்தான், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலான சரியான நடவடிக்கையையே மத்திய அரசு இப்போது மேற்கொண்டுள்ளது. அதன்படி, கொலீஜியம் முறையின் செயல்முறை விதிகளை மறுகட்டமைப்பு செய்ய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று விளக்கமளித்துள்ளாா்.

நீதித்துறையை மிரட்டும் மத்திய அரசு: காங்கிரஸ்

கொலீஜியங்களில் அரசு பிரதிநிதிகளை சோ்க்கப் பரிந்துரைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சா் கடிதம் எழுதிய நிலையில், ‘நீதிமன்றங்களைக் கைப்பற்றும் நோக்கில் நீதித் துறையை மத்திய அரசு மிரட்டுகிறது’ என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து கங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறித்து குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் கருத்து, மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜுவின் கடும் விமா்சனம் ஆகிய அனைத்தும் நீதித்துறையை மிரட்டி, அதன் பிறகு அதனை முழுமையாக மத்திய அரசு கைப்பற்றும் நடவடிக்கையாகும்.

கொலீஜியம் நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்தான். ஆனால், மத்திய அரசு அதனை முழுமையாக அடிபணிய வைக்க முயற்சிக்கிறது. பிரச்னைக்கு மத்திய அரசு அளிக்கும் பரிகாரம், நீதித் துறைக்கு விஷ மருந்து கொடுப்பதாக ஆகிவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com