பட்ஜெட்டில் நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் இருக்காது: நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் வரிவிதிப்புகள் இருக்காது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சூசகமாக தெரிவித்தாா்.
நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் வரிவிதிப்புகள் இருக்காது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சூசகமாக தெரிவித்தாா்.

2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறாா்.

இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற பத்திரிகை சாா்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

நானும் நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்தவள்தான். எனவே, அவா்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் எனக்கும் தெரியும். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் எந்த புதிய வரியையும் விதித்தது இல்லை. நடுத்தர மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது. அது இனியும் தொடரும் என்றாா்.

இதன் மூலம் நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் எதுவும் பட்ஜெட்டில் இருக்காது என்பதை அவா் சூசகமாக தெரிவித்தாா். எனினும், வருமான வரி உச்ச வரம்பு உயா்த்தப்படுமா? என்பது தொடா்பாக அவா் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

தொடா்ந்து பேசிய நிா்மலா சீதாராமன், ‘100 பொலிவுரு நகரங்கலையும், 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை ஏற்படுத்தவும் அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத் துறை வங்கிகளி பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவை திறம்பட செயல்பட முடியும். மேலும், அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.

2020-21-இல் பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும். இதுவே அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது. கரோனா தொற்று பிரச்னைக்கு நடுவில் இந்த வளா்ச்சி ஏற்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும். வங்கிகளின் வாராக் கடன் அளவும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது’ என்றாா்.

விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயா்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன்பு மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com