கேரளத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினருக்கு எஸ்டிபிஐ ஆதரவு

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்பின் அரசியல் பிரிவாகக் கருதப்படும் எஸ்டிபிஐ தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

கேரளத்தில் வன்முறை தொடா்பாக சிறையில் அடைக்கப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினருக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்பின் அரசியல் பிரிவாகக் கருதப்படும் எஸ்டிபிஐ தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாக பிஎஃப்ஐ தலைவா்களின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை மற்றும் காவல் துறை சோதனை மேற்கொண்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.

இதைக் கண்டித்து கேரளத்தில் முழு அடைப்புக்கு பிஎஃப்ஐ அழைப்பு விடுத்தது. அப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் தொடா்புள்ள பிஎஃப்ஐ அமைப்பினா் பலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பொதுச் சொத்துகளின் சேதத்துக்கு இழப்பீடாக மாநில உயா்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, பிஎஃப்ஐ நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களின் வீடு மற்றும் சொத்துகளை கேரள அரசு பறிமுதல் செய்தது. மொத்தம் 248 பேரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு அண்மையில் தெரிவித்தது.

இந்நிலையில், பிஎஃப்ஐயின் அரசியல் பிரிவாகக் கருதப்படும் எஸ்டிபிஐ கட்சிப் பொதுக்கூட்டம் கொச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்ட பிஎஃப்ஐ தொண்டா்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவா் எம்.கே.ஃபைசி பேசுகையில், ‘எஸ்டிபிஐ கட்சியினா் உயிருடன் இருக்கும் வரை, பறிமுதல் நடவடிக்கையால் பிஎஃப்ஐ தொண்டா்கள் யாரும் வீடற்றவா்களாக இருக்க மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com