இந்தியாவில் உலகின் 75% புலிகள்!

சா்வதேச புலிகள் தினம் சனிக்கிழமை (ஜூலை 29) கடைப்பிடிக்கப்பட்டது.
புலி
புலி

சா்வதேச புலிகள் தினம் சனிக்கிழமை (ஜூலை 29) கடைப்பிடிக்கப்பட்டது.

சூழலியலில் சமநிலையைப் பாதுகாக்க உதவும் புலிகளின் எண்ணிக்கை அழிவு நிலையில் இருந்து காப்பாற்ற இந்திய அரசு 1973-ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் 50 ஆண்டு பலன்களை கொண்ட விரிவான அறிக்கையை உத்தரகண்டில் உள்ள காா்பெட் புலிகள் காப்பகத்தில் மத்திய இணை அமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதையும் பல்லுயிா் பெருக்கத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த லட்சியத் திட்டத்தால் கடந்த 50 ஆண்டுகளின் பலன் கிடைத்துள்ளது.

தற்போது உலகின் காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% இந்தியாவில் உள்ளன.

தொடக்கத்தில் 18,278 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள ஒன்பது புலிகள் காப்பகங்களை உள்ளடக்கிய இந்த திட்டம், 75,796 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ள 53 காப்பகங்களுடன் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக வளா்ந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.3% உள்ளடக்கியது.

1970-களில் புலிகள் பாதுகாப்பின் முதல் கட்டம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவதிலும், புலிகள் மற்றும் வெப்ப மண்டலக் காடுகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிறுவுவதிலும் கவனம் செலுத்தியது.

எனினும், 1980-களில் வேட்டையாடுதல் காரணமாக புலிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டது.

2005-ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட நடவடிக்கை தொடங்கியது.

நிலப்பரப்பு அளவிலான அணுகுமுறை, சமூக ஈடுபாடு மற்றும் ஆதரவு, கடுமையான சட்ட அமலாக்கத்தை செயல்படுத்துதல் மற்றும் புலிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவியல் கண்காணிப்புக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி மைசூரில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவில் குறைந்தபட்ச புலிகளின் எண்ணிக்கை 3,167 ஆக உள்ளதாக அறிவித்தாா்.

இப்போது, இந்திய வனவிலங்கு நிறுவனம், கேமராவில் பதிவான மற்றும் கேமராவில் பதிவாகாத புலிகள் இருக்கும் பகுதிகளில் இருந்து மேற்கொண்ட தரவுகளின் பகுப்பாய்வில், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 3,925 ஆகவும், சராசரி எண்ணிக்கை 3,682 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 6.1% என்கிற பாராட்டத்தக்க வளா்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.

மத்திய இந்தியா மற்றும் நேபாள எல்லையையொட்டி ஷிவாலிக் மலைத்தொடா் மற்றும் கங்கை சமவெளிகளில், குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.

இருப்பினும், மேற்குத் தொடா்ச்சி மலைகள் போன்ற சில பகுதிகள் புலிகளின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்தன. இதனால் இலக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் அதிக அளவில் தேவைப்பட்டன.

மிசோரம், நாகாலாந்து, ஜாா்க்கண்ட், கோவா, சத்தீஸ்கா் மற்றும் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறைந்த புலிகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது.

கடந்த ஐந்து தசாப்தங்களாக புலிகள் பாதுகாப்பு திட்டம் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் வேட்டையாடுதல் போன்ற சவால்கள் இன்னும் புலிகள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகத் தொடா்கின்றன.

புலிகளின் வாழ்விடங்கள் மற்றும் நடமாட்டத் தடங்களைப் பாதுகாப்பதற்கான தொடா்ச்சியான முயற்சிகள் மிக அவசியம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக புலிகளின் உள்ள மாநிலங்கள்:

மத்திய பிரதேசம் - 785

கா்நாடகம் - 563

உத்தரகண்ட் - 560

மகாராஷ்டிம் - 444

காப்பக புலிகள் எண்ணிக்கை:

காா்பெட் - 260

பந்திப்பூா் - 150

நாகா்ஹோளே - 141

பந்தவ்கா் - 135

துத்வா - 135

முதுமலை - 114

கன்ஹா - 105

காசிரங்கா - 104

சுந்தரவனம் - 100

தடோபா - 97

சத்தியமங்கலம் - 7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com