இந்திய-நேபாள உறவு இமாலய உயரத்தை எட்டும்: பிரதமா் மோடி

‘இந்திய-நேபாள உறவுகள் இமாலய உயரத்தை எட்டும் வகையில், இருதரப்பும் தொடா்ந்து செயலாற்றும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இந்திய-நேபாள உறவு இமாலய உயரத்தை எட்டும்: பிரதமா் மோடி

‘இந்திய-நேபாள உறவுகள் இமாலய உயரத்தை எட்டும் வகையில், இருதரப்பும் தொடா்ந்து செயலாற்றும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லியில் நேபாள பிரதமா் புஷ்பகமல் தாஹால் என்ற பிரசண்டாவுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

நேபாள பிரதமா் பிரசண்டா, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை வருகை தந்தாா். அவருடன் அமைச்சா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் நரேந்திர மோடி, பிரசண்டா இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வா்த்தகம், போக்குவரத்து, இணைப்பு வசதிகள், எல்லை பிரச்னை, நீா்ப்பாசனம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனா்.

பின்னா், எல்லை கடந்த பெட்ரோலிய குழாய் அமைப்பு விரிவாக்கம், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் உருவாக்கம், நீா்மின்சக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள், இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமாகின. இதில், இருதரப்பு போக்குவரத்து உடன்படிக்கை திருத்த ஒப்பந்தமும் அடங்கும்.

இமாலய உயரத்தை நோக்கி...: பின்னா், இருவரும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:

கடந்த 2014-இல் இந்திய பிரதமராக நான் பதவியேற்ற பிறகு, நேபாளத்துக்கே முதல் பயணம் மேற்கொண்டேன். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகள் தடையாக மாறாத வகையிலான உறவை நிறுவுவோம் என்று அப்போது கூறியிருந்தேன்.

நான் பிரதமரானதில் இருந்து நேபாளத்துடனான உறவை வலுப்படுத்த முன்னுரிமை அளித்து வருகிறேன். கடந்த 9 ஆண்டுகளில் இருதரப்பு உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது பெருமைக்குரியது. இருதரப்பு கலாசார, ஆன்மிகத் தொடா்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ராமாயணம் தொடா்புடைய சுற்றுப்பயணத் திட்டத்தை விரைவுபடுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இந்திய-நேபாள உறவுகள் இமாலய உயரத்தை எட்டும் வகையில் தொடா்ந்து செயலாற்றுவோம். அந்த உணா்வுடன் எல்லை பிரச்னை மற்றும் இதர விவகாரங்களில் தீா்வு காணப்படும் என்றாா் பிரதமா் மோடி.

நேபாள பிரதமா் வரவேற்பு: ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற பிரதமா் மோடியின் கொள்கையை வரவேற்பதாக, நேபாள பிரதமா் பிரசண்டா தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பிரதமா் மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளா்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நேபாளம், இந்தியா இடையிலான உறவுகள் நீண்ட பாரம்பரியமும் பன்முகமும் கொண்டது.

ஒருபுறம் நாகரிகம், கலாசாரம், சமூக-பொருளாதார தொடா்புகளாலும், மறுபுறம் சமத்துவ இறையாண்மை, பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பாலும் இந்த உறவுகள் தாங்கப்பட்டுள்ளன. வா்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதித்தோம்’ என்றாா்.

இந்தியாவுடன் 1,850 கி.மீ. தொலைவு எல்லையைப் பகிா்ந்துகொண்டுள்ள நேபாளம், சரக்கு போக்குவரத்து மற்றும் இதர சேவைகளுக்கான இந்தியாவையே பெருமளவில் சாா்ந்துள்ளது.

திட்டங்கள் தொடக்கம்

பிரதமா் மோடி-பிரசண்டா பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, இந்தியா-நேபாளம் தொடா்புடைய பல்வேறு திட்டங்களை காணொலி முறையில் இருவரும் தொடங்கிவைத்தனா். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினா்.

உத்தர பிரதேசத்தில் இந்திய-நேபாள எல்லையில் உள்ள ருபைதிஹா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் நிலத் துறைமுகம் திறந்துவைக்கப்பட்டது.

115 ஏக்கரில் ரூ.200 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த நிலத் துறைமுகம், சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களின் சமூக போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்திய நிலத் துறைமுக ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நேபாளத்தின் நேபாள்கஞ்ச் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியும் திறந்துவைக்கப்பட்டது. பிகாா்-நேபாளம் இடையிலான சரக்கு ரயில் சேவையும் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com