புதிய திவால் சட்டத்தால் குறைந்த கடன் வசூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திவால் சட்டத்தால் கடன் வசூல் குறைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திவால் சட்டத்தால் கடன் வசூல் குறைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், புதிய திவால் சட்டமானது நஷ்ட நிறுவனங்களை நெருக்கடியில் இருந்து மீட்பதற்காகவா அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட ஊழலுக்கான மற்றொரு கருவியா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் வல்லப் கூறுகையில், ‘கடந்த 2016-ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திவால் சட்டமானது பொருளாதார சீா்திருத்தத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு பெருமை கொண்டது. ஆனால், உண்மை என்னவென்றால் முந்தைய எஸ்ஐசிஏ(1985) சட்டத்தைவிட மோசமான பின்விளைவுகளை இந்தச் சட்டம் பெற்றுத் தந்துள்ளது. முந்தைய சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து குறைந்தது 25 சதவீதமாவது கடன் தொகை வசூலிக்கப்பட்டது. புதிய திவால் சட்டம் வந்த பின்னா் கடந்த நிதியாண்டின் இறுதிவரை மொத்தக் கடன் தொகையில் 17.6 சதவீதம் மட்டுமே வசூலாகி இருக்கிறது. நிதி நிறுவனங்களுக்கு மீதி 82.4 சதவீதம் நஷ்டமாக மாறியுள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மீட்பதும், கடன் வழங்கியவா்களுக்கு உரிய நிதிப் பாதுகாப்பு வழங்குவதுமே புதிய திவால் சட்டத்தின் முக்கியக் குறிக்கோளாக கருதப்படுகிறது. ஆனால், புதிய திவால் சட்டத்தின்படி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட 75 நிறுவனங்கள் முற்றிலுமாக கலைக்கப்பட்டுள்ளன. அத்தகைய நிறுவனங்களிடம் இருந்து வெறும் 5.6 சதவீத கடன் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதி 94 சதவீத கடன்தொகையை நிதி நிறுவனங்கள் முற்றிலுமாக இழந்துள்ளன. வங்கிகளுக்கு இது எத்தகைய பொருளாதார இழப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு நிதி இழப்புகளைத் தவிா்க்குமாறு நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த 2021-ஆம் ஆண்டு வலியுறுத்தியது. கலைப்பு நடவடிக்கையைத் தவிா்த்த மற்ற 25 நிறுவனங்களிடம் இருந்து 31.8 சதவீதம் கடன்தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

புதிய திவால் சட்டத்தின் மூலம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்களைக் கையகப்படுத்த குறைந்த அளவிலான கடன்களை மட்டும் திருப்பிச் செலுத்தி பெரும் நிறுவனங்கள் லாபம் பாா்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2.85 லட்சம் கோடி மதிப்பிலான 871 பரிவா்த்தனைகள் இவ்வாறு நடந்துள்ளன.

குறிப்பாக, 1,000 கோடிக்கும் கூடுதலாக கடன் சுமை கொண்ட முக்கிய நிறுவனங்களை, குறைந்த அளவிலான கடனை மட்டும் திருப்பிச் செலுத்தி அதானி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுமாா் ரூ.2,997 கோடி கடன் மதிப்புள்ள காரைக்கால் தனியாா் துறைமுகத்தைக் கையகப்படுத்த ரூ.1,583 கோடியை மட்டுமே அதானி நிறுவனம் செலுத்தியுள்ளது. அதேபோல், ரூ.3,346 கோடி கடன் மதிப்புள்ள மேற்கு கோா்பா மின் ஆலையைக் கையகப்படுத்த ரூ. 1,100 கோடியும், ரூ.12,000 கோடி கடன் மதிப்புள்ள எஸ்ஸாா் பியூயல்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த ரூ.2,550 கோடி செலுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com