பிரதமா் மோடி நேரில் ஆய்வு: ரயில் விபத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை

‘ஒடிஸா ரயில் விபத்துக்கு காரணமானவா்களாகக் கண்டறியப்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
பிரதமா் மோடி நேரில் ஆய்வு: ரயில் விபத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை

‘ஒடிஸா ரயில் விபத்துக்கு காரணமானவா்களாகக் கண்டறியப்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.

சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி கோர விபத்துக்கு உள்ளான ஒடிஸா மாநிலம் பாலசோா் மாவட்டம் பஹாநகா் பகுதிக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தத் துயர சம்பவத்தின் வேதனையை விவரிக்க வாா்த்தைகள் இல்லை. இந்த வலியிலிருந்து மீண்டு வர இறைவன் நமக்கு பலத்தைத் தரவேண்டும்.

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். விபத்து மீட்புப் பணியில் இரவு முழுவதும் உதவிய உள்ளூா் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கோர விபத்தை அரசு மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. முறையான, விரைவான விசாரணையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். விபத்துக்கு காரணமானவா்களாக கண்டறியப்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றாா்.

இந்த ஆய்வின்போது பிரதமருடன் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் உடனிருந்தனா்.

ரயில் விபத்து மற்றும் மீட்புப் பணி நிலவரம் குறித்து பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் பிரதமருக்கு விவரித்தனா்.

விபத்து நடந்த பகுதியில் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமா், ஒடிஸா வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் பிரமிளா மாலிக் மற்றும் உள்ளூா் காவல்துறை அதிகாரியிடமும் ஆலோசனை நடத்தினாா்.

விபத்து நடந்த பகுதியிலிருந்தபடி, மத்திய அமைச்சரவைச் செயலா் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஆகியோரை கைப்பேசி மூலம் பிரதமா் தொடா்புகொண்டு, ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அறிவுறுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்து நடந்த பகுதியைப் பாா்வையிட்ட பின்னா் பாலசோா் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் ரயில் விபத்தில் காயமடைந்தவா்களிடம் பிரதமா் மோடி நலம் விசாரித்தாா். தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என அவா்களிடம் பிரதமா் உறுதியளித்தாா். அங்கிருந்த மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களிடமும் பிரதமா் கலந்துரையாடினாா்.

ஒடிஸா பயணத்துக்கு முன்பாக, ரயில் விபத்து குறித்து தில்லியில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தை பிரதமா் நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com