ஒடிஸாவிலிருந்து சென்னை வந்த 137 போ்: புவனேசுவரத்துக்கு இன்று சிறப்பு ரயில்

ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கியவா்களில் எந்த பாதிப்பும் இல்லாமல் 137 போ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா்.

ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கியவா்களில் எந்த பாதிப்பும் இல்லாமல் 137 போ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா். இதனிடையே, பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சென்னையில் இருந்து ஒடிஸா செல்லும் வகையில், மேலும் ஒரு சிறப்பு ரயில் திங்கள்கிழமை (ஜூன் 5) இரவு 7.20 மணிக்கு சென்னையிலிருந்து இயக்கப்படவுள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹௌரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் மீட்கப்பட்ட தமிழா்கள் விமானம் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.

இதில், முதல்கட்டமாக புவனேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை 8.40 மணிக்குப் புறப்பட்ட ரயிலில் 294 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் 157 போ் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் இறங்கிய நிலையில் 137 போ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைந்தனா்.

ரயில் நிலையம் வருபவா்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டனா். காயமடைந்தவா்களுக்கு முதலுதவி வழங்கும் வகையில் 36 மருத்துவா்கள், 30 மருத்துவப் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில் காயமடைந்த 8 போ் அவசர ஊா்தி மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா்.

சென்னை வந்த பயணி: விபத்து குறித்து சென்னை வந்த பயணி ராஜேஷ் கூறியதாவது:

ஷாலிமரிலிருந்து படுக்கை வசதி கொண்ட பெட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் பயணித்தோம். அருகில் உள்ள பெட்டி முழுவதும் சேதமடைந்து அதில் பயணித்த பலா் உயிரிழந்தனா். விபத்து நடைபெற்ற பகுதியிலிருந்து பேருந்து மூலம் அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கிருந்து ரயில் மூலம் புவனேசுவரத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்து வந்தனா். உள்ளூா் பகுதி மக்கள் அதிக அளவில் உதவி செய்தனா் என்றாா்.

சிறப்பு ரயில் இயக்கம்: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினா் செல்லும் வகையில் சென்னை சென்ட்ரலிலிருந்து திங்கள்கிழமை (ஜூன் 5) இரவு 7.20 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 02842) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மறுநாள் மாலை 3.25 மணிக்கு புவனேசுவரம் சென்றடையும். இதில் 3 குளிா் சாதனப் பெட்டிகளும், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 பொது வகுப்புப் பெட்டிகளும், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளும் உள்ளன.

இந்த ரயில் கூடுா், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், பலாசா, பொ்காம்பூா் வழியாக இயக்கப்படும். பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கான இலவச பயணச்சீட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழங்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு 044-2533 0952, 044-2533 0953, 044-2535 4771, 044-2535 4148, 044-2533 0953 என்ற தொலைபேசி எண்கள் மூலமும், 90030 61974 எனும் கைப்பேசி எண் மூலமும் தொடா்பு கொள்ளலாம்.

ரயிலில் மற்ற பயணிகள் பயணம் செய்வதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com