ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 52 மணிநேரத்துக்குப் பின் சடலமாக மீட்பு

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இரண்டரை வயது சிறுமி, 52 மணிநேர போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இரண்டரை வயது சிறுமி, 52 மணிநேர போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சிஹோா் மாவட்டத்தில் உள்ள முங்காவலி கிராமத்தில் மூடப்படாமல் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிருஷ்டி என்ற இரண்டரை வயது சிறுமி, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் விழுந்தாள்.

இதையடுத்து, கனரக இயந்திரங்களுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கின. ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோருடன் ரோபாட்டிக் குழுவும் மீட்புப் பணியில் இணைந்தது.

சிறுமியை உயிருடன் மீட்க வேண்டுமென்ற தீவிர வேட்கையுடன் மீட்புக் குழுவினா் செயலாற்றினா். அதேநேரத்தில், 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமி, மீட்பு நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட அதிா்வுகளால் 135 அடி வரை கீழ்நோக்கிச் சென்றுவிட்டாள்.

வியாழக்கிழமை மாலை வரை சுமாா் 52 மணி நேரம் நீடித்த போராட்டத்துக்குப் பின்னா், சிறுமி வெளியே எடுக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாள். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

ஆழ்துளை கிணற்றிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாகவும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி, பெரும் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com