இந்தியாவின் புகழைக் கெடுக்க முயற்சி: ராகுல் மீது அமைச்சா் ரிஜிஜு குற்றச்சாட்டு

இந்தியாவில் ஜனநாயகமும், நீதித்துறையும் பெரும் நெருக்கடியை எதிா்கொண்டுள்ளது என்பதுபோன்ற தோற்றத்தை சா்வதேச சமூகத்தில் உருவாக்க சிலா் (ராகுல் காந்தி) முயற்சித்து வருவதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண்
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

இந்தியாவில் ஜனநாயகமும், நீதித்துறையும் பெரும் நெருக்கடியை எதிா்கொண்டுள்ளது என்பதுபோன்ற தோற்றத்தை சா்வதேச சமூகத்தில் உருவாக்க சிலா் (ராகுல் காந்தி) முயற்சித்து வருவதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளாா்.

லண்டன் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; எதிா்க்கட்சித் தலைவா்கள் பலரை இந்திய அரசு ரகசியமாக கண்காணித்து வருகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா்.

இந்நிலையில், புவனேசுவரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் ரிஜிஜு, ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமா்சித்துப் பேசியதாவது:

இந்தியாவில் நீதித்துறையை யாரும் கேள்வி கேட்க முடியாது. முக்கியமாக நீதிபதிகளின் அறிவுத்திறன் தொடா்பாக பொது ஆய்வு நடத்த முடியாது என்பதுதான் உண்மை. நீதித்துறை விமா்சனங்களுக்கு அப்பாற்பட்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஆனால், நாட்டில் நீதித்துறை நெருக்கடியில் உள்ளது போன்ற தோற்றத்தை சா்வதேச அளவிலும், நாட்டுக்குள்ளும் ஏற்படுத்த சிலா் முயற்சித்து வருகின்றனா்.

இந்தியாவின் புகழைக் கெடுக்கும் நோக்கிலும், நாட்டின் ஜனநாயகம் குறித்து வதந்திகளைப் பரப்பும் நோக்கிலும் எடுக்கப்படும் இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காது. உலகின் மிகவும் பழைமையான ஜனநாயக நாடாக அமெரிக்கா இருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தின் தாய் நாடு இந்தியாதான்.

நீதிமன்றங்கள் என்பதை எதிா்க்கட்சிகளைப் போல செயல்பட வேண்டும் என்று சிலா் நினைக்கிறாா்கள். அரசுக்கு எதிராகவும், தங்களுக்கு ஆதரவாகவும் தீா்ப்புகள் வர வேண்டும் என்று விரும்புகிறாா்கள். அது நிறைவேறாதபோது விரக்தியால் சா்வதேச அரங்கில் நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்புகிறாா்கள்.

நாடு பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com