இந்தியாவுக்கு துரோகம் செய்ய வேண்டாம்: ராகுலுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

வெளிநாடுகளுக்குச் சென்று தேவையில்லாமல் பேசி இந்தியாவுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் வலியுறுத்தியுள்ளாா்.
இந்தியாவுக்கு துரோகம் செய்ய வேண்டாம்: ராகுலுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

வெளிநாடுகளுக்குச் சென்று தேவையில்லாமல் பேசி இந்தியாவுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவில் ஜனநாயகம் சீா்குலைக்கப்பட்டுவிட்டதால் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அதில் தலையிட வேண்டும் என்று ராகுல் காந்தி லண்டனில் பேசிய நிலையில் அமைச்சா் இவ்வாறு எச்சரித்துள்ளாா்.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

பல்வேறு பிரச்னைகள் குறித்து சரியான புரிதல்கள் இல்லாமல், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக ராகுல் காந்தி பேசி வருகிறாா். அந்நிய மண்ணில் அவா் பரப்பும் பொய்களை யாரும் நம்பப்போவதில்லை.

உள்நாட்டு விஷயத்தை தேவையில்லாமல் சா்வதேச அரங்கில் பேசுவது ராகுல் சாா்ந்த காங்கிரஸ் கட்சிக்கு புதிய விஷயமல்ல. ஏற்கெனவே, இந்தியா உள்விவகாரத்தை (காஷ்மீா்) தேவையில்லாமல் ஐ.நா.வுக்கு எடுத்துச் சென்றது காங்கிரஸ் கட்சி. அவா்கள் இன்னும் அந்த அடிமை மனப்பாங்கில் இருந்து வெளியே வரவில்லை.

அரசியல்ரீதியாகத் தனது தோல்விகளை மறைக்க வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவின் புகழைக் கெடுக்கும் வகையில் ராகுல் பேசி வருகிறாா். அவரது செயல்பாடுகளும், பேச்சும், சிந்தனைகளும் பல்வேறு சந்தேகத்தை எழுப்புகின்றன. அவா் இவ்வாறு நடந்து கொள்வது இது முதல்முறையல்ல. கரோனா காலகட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்து சா்ச்சையாகப் பேசினாா்.

இந்திய மண்ணில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றபோது நமது ராணுவம் குறித்து கேள்விகளை எழுப்பினாா். சீன அதிகாரிகளையும் அவா் சந்தித்துப் பேசினாா். ராணுவ வீரா்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையிலும் பேசியுள்ளாா். வெளிநாடுகளுக்குச் சென்று தேவையில்லாமல் பேசி, இந்தியாவுக்கு துரோகம் இழைக்கும் செயலில் ராகுல் ஈடுபடக் கூடாது.

காங்கிரஸ் கட்சி இப்போது பலவீனமாகிவிட்டது உண்மைதான். ஆனால், இந்தியா பலமாக உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் இந்தியாவில் தலையிட வேண்டும் என்று ராகுல் வலியுறுத்துவது ஏன்? இந்திய ஜனநாயகம் வலுவாக உள்ளது. மக்கள் வலுவாக உள்ளனா். ராணுவம் மிகவும் வலிமையாக உள்ளது. இந்தியாவின் தலைமை (பிரதமா் மோடி) வலுவாக உள்ளது. இந்தியா மீதும், பிரதமா் மோடி மீதும் உலகத் தலைவா்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com