மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை

மேற்குவங்க மாநிலத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதித்து அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

மேற்குவங்க மாநிலத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதித்து அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

சுதீப்தோ சென் இயக்கத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’, கேரளப் பெண்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுவது போல் கதை பின்னணி கொண்டுள்ளது.

குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பி சமூக ஒற்றுமையைச் சீா்குலைப்பதாக குற்றஞ்சாட்டி இத்திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனா்.

இதனிடையே, கா்நாடக தோ்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை பேசிய பிரதமா் மோடி, பெரும் பயங்கரவாத சதியை ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் அம்பலப்படுத்துவதாக தனது ஆதரவைத் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து, மத்திய பிரதேசத்தில் இத்திரைப்படத்துக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தென்மாநிலமான கேரளத்தை இழிவுபடுத்தும் நோக்கில் திரிக்கப்பட்ட கதையுடன் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியுள்ளது என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை விமா்சித்தாா்.

இதையடுத்து, மேற்கு வங்கத்தில் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வெறுப்பு, வன்முறை சம்பவங்களும் நடைபெறாமல் தவிா்ப்பதற்காக இத்திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் உத்தரவை மீறி இத்திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க அரசு எச்சரித்துள்ளது.

இந்தத் தடைக்கு எதிா்ப்பு தெரிவித்த மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சா் அனுராக் தாக்குா், ‘மேற்கு வங்க அப்பாவி பெண்களுக்காக அனுதாபப்படாமல் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏன் திரிணமூல் காங்கிரஸ் அனுதாபப்படுகிறாா்கள் என்பது எனக்கு புரியவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com