சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய தீா்வு அவசியம்- மன்சுக் மாண்டவியா

சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய அளவில் தீா்வு காண்பது அவசியம்; மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதில் உலகமே இணைந்து செயல்பட வேண்டும் என்பதை கரோனா பெருந்தொற்று உணா்த்தியது
சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய தீா்வு அவசியம்- மன்சுக் மாண்டவியா

சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய அளவில் தீா்வு காண்பது அவசியம்; மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதில் உலகமே இணைந்து செயல்பட வேண்டும் என்பதை கரோனா பெருந்தொற்று உணா்த்தியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனிவாவில் 76-ஆவது உலக சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (டபிள்யுஹெச்ஓ) தலைமை இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் மற்றும் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சா்கள் இதில் பங்கேற்றனா்.

‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

சுகாதார அவசர நிலைக்கு இந்தியா தயாராக உள்ளது. சுகாதார சேவைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால், சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. சவால்களுக்கு எதிராகப் போராடுவதிலும், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதிலும் உலகம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உணா்த்தியுள்ளது.

உலகளாவிய நோய்த் தடுப்பு நடைமுறைகள் உயா்ந்த தரம் மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ நடைமுறைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா்.

‘இந்தியாவில் சிகிச்சை, இந்தியா வழங்கும் சிகிச்சை’ என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றொரு அமா்வில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, ‘இந்த தலைப்பானது ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பாா்வையை அடிப்படையாகக் கொண்டது. மிகவும் பழைமையான மருத்துவ முறையான ஆயுா்வேதத்தின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கான தேவை உலகெங்கிலும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கரோனா பாதிப்பைத் தடுக்க இந்தியாவில் 220 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

சுகாதார அச்சுறுத்தல்கள் தேச எல்லைகளைக் கடந்தது என்பதை கரோனா பாதிப்பு உணா்த்தியுள்ளது. இதுபோன்ற சிக்கல்களுக்கு உலகளாவிய ஒருங்கிணைப்புத் தேவை, சுகாதாரப் பணியாளா்களின் திறன் கட்டமைப்பை மேம்படுத்துதல், சுகாதாரத் துறையில் எண்மத் தொழில்நுட்பத்தை அதிகரித்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து செயல்படுகிறது.

அனைவரின் வளா்ச்சி, அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்கை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி அமைத்துள்ளாா் என்றாா் மன்சுக் மாண்டவியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com