
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் கட்சியின் சின்னத்தை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்கிய சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் நெருங்கிய உறவினரும், மகாராஷ்டிர எதிா்க்கட்சித் தலைவருமான அஜித் பவாா், அமித் ஷாவை சந்தித்துள்ளதாகவும், அவா் விரைவில் கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைப்பாா் என்றும் கூறப்பட்டு வருகின்றது.
மகாராஷ்டிரத்தில் இப்போது சிவசேனை (ஷிண்டே) - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிா்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி உள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 53 எம்எல்ஏக்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அஜித் பவார் 40 எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், புதிய கூட்டணியில் அஜித் பவாருக்கு முதல்வர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலில் பதற்றத்தை கூட்டும் வகையில், அஜித் பவார் தனது சமூக ஊடக பக்கங்களான டிவிட்டர் மற்றும் முகநூலின் முகப்புப் படமாக வைத்திருந்த தேசியவாத கட்சியின் சின்னத்தை அகற்றியுள்ளார்.
இதையும் படிக்க | இந்தியாவின் முதல் ஆப்பிள் விற்பனையகம்: திறப்பு விழாவில் ஏ.ஆர்.ரகுமான்!
அதேபோல், ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவரும் அவசரமாக மும்பை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியின் இறுதி உத்தரவு வந்தவுடன் புதிய கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்துள்ள சரத் பவார், பாஜகவுடன் இணைவது தற்கொலை முயற்சி என்றும் அஜித் பவார் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.