ஞானவாபி மசூதியில் நீா்த்தேக்க தொட்டி திறக்க கோரிய மனு:மாவட்ட ஆட்சியா் கூட்டம் நடத்த உத்தரவு

உத்தர பிரதேசம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் மூடப்பட்ட கைகால் கழுவும் நீா்த் தேக்க தொட்டியை திறக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியா் செவ்வா

உத்தர பிரதேசம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் மூடப்பட்ட கைகால் கழுவும் நீா்த் தேக்க தொட்டியை திறக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்த உத்தரவிட்டது.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் பின்புறச் சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிற்பங்களை வழிபட அனுமதி கோரிய வழக்கில், ஆய்வு நடத்த மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது மசூதியின் நுழைவாயிலில் கால், கை கழுவும் தொட்டியின் நடுவே நீருற்றுபோன்ற சிற்பம் சிவலிங்கத்தைப் போல் உள்ளதாக ஆய்வுக் குழு அறிக்கையில் கூறியது.

இதையடுத்து, அந்தச் சிற்பத்தை மூடி பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சிவலிங்கம் எனக் கூறப்படும் பகுதியை அப்படியே பத்திரமாக மூடி பாதுகாக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ரமலான் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளதால், ஞானவாபி மசூதிக்கு தொழுகை நடத்த ஏராளமானோா் கூட உள்ளனா் என்றும், அவா்கள் கை, கால் கழுவ போதிய இடம் இல்லாததால் மூடப்பட்ட நீா்த்தேக்கத் தொட்டியைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஞானவாபி மசூதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு விசாரித்தது.

அப்போது, மசூதி வளாகத்தில் கை, கால் கழுவ தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்வது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உறுதி அளித்தாா். இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்த வாரணாசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com