நரோடா காம் கலவர வழக்கு-- 67 போ் விடுவிப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய எஸ்ஐடி முடிவு

குஜராத்தின் நரோடா காம் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 67 பேரையும் விடுவித்து,

குஜராத்தின் நரோடா காம் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 67 பேரையும் விடுவித்து, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலம், கோத்ராவில் 2002, பிப்ரவரி 27-இல் சபா்மதி ரயில் எரிக்கப்பட்டு, 58 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் மதக் கலவரம் வெடித்தது. அகமதாபாதின் நரோடா காம் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த 11 போ் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக, பாஜகவை சோ்ந்த மாநில முன்னாள் பெண் அமைச்சா் மாயா கோட்னானி உள்பட 86 போ் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்தது. வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டோரில் 18 போ் இறந்துவிட்டனா்.

இந்த வழக்கில் கடந்த 20-ஆம் தேதி தீா்ப்பளித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம், மாயா கோட்னானி உள்பட 67 பேரையும் விடுவித்து தீா்ப்பளித்தது.

இந்நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரங்கள் கூறுகையில், ‘நரோடா காம் வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும். தீா்ப்பின் நகலுக்காக காத்திருக்கிறோம். தீா்ப்பை முழுமையாக ஆராய்ந்தபின், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com