போர்ன்விடாவுக்கு சிக்கல்: தவறான விளம்பரங்களை நீக்க நோட்டீஸ்

போர்ன்விடா பாக்கெட்டுகளில் உள்ள லேபிள்களை மாற்றும்படியும், தவறான விளம்பரங்களை நிறுத்தும்படியும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போர்ன்விடாவுக்கு சிக்கல்: தவறான விளம்பரங்களை நீக்க நோட்டீஸ்

போர்ன்விடா பாக்கெட்டுகளில் உள்ள லேபிள்களை மாற்றும்படியும், தவறான விளம்பரங்களை நிறுத்தும்படியும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மான்டலெஸ் இன்டர்நேஷனல் தயாரித்து சந்தையில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் என்று விளம்பரம் செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் பொருள் போர்ன்விட்டா. இதனை லட்சக்கணக்கான பெற்றோர்கள் வாங்கி தங்களின் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் விடியோ வெளியிடும் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ரேவந்த் ஹிமந்த் சின்ஹா என்பவர் போர்ன்விடா குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு காணொலி வெளியிட்டிருந்தார்.

அதில், போர்ன்விடாவில் அதிகளவு சர்க்கரை உள்ளதாகவும், குழந்தைகளுக்கு புற்றுநோய் உருவாக்கக்கூடிய சில பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சுமார் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில், போர்ன்விடா தயாரிக்கும் மான்டலெஸ் இன்டர்நேஷனல் ரேவந்த்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியது.

வழக்கை சந்திக்க போதிய பணம் இல்லை எனக் கூறிய ரேவந்த், சமூக ஊடகங்களில் பதிவிட்ட காணொலிகளை நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு ஊட்டசத்து நிபுணர்கள் சமூக ஊடகங்களில் ரேவந்துக்கு ஆதரவாக போர்ன்விடாவுக்கு எதிரான கருத்துகளை பதிவிடத் தொடங்கினர்.

இந்நிலையில், மான்டலெஸ் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பின் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் நிர்ணயம் செய்துள்ள அளவின்படி, போர்ன்விடாவில் உள்ள பொருள்களில் அளவு இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. போர்ன்விடாவில் உள்ள சர்க்கரை அளவு நிர்ணயம் செய்ததைவிட அதிகமாக உள்ளதாகவும், மால்டோடெக்ஸ்டிரின் என்ற லிக்விட் குளூகோஸ் போன்றவையும் தனியாக சேர்க்கப்பட்டுள்ளது. இது விதிமுறையை மீறிய கூடுதல் சர்க்கரை அளவு.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் என்ற பெயரில் தவறாக வழிநடத்தும் வகையில் போர்ன்விடாவின் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. போர்விடா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் என்பதற்கு அறிவியல்பூர்வ சான்றுகள் சமர்பிக்க வேண்டும்.

உடனடியாக குழந்தைகளை மையமாக கொண்டு வெளியாகும் விளம்பரங்களை நிறுத்த வேண்டும். பாக்கெட்டுகளில் உள்ள லேபிள்களையும் மாற்றி போர்ன்விடாவில் உள்ள உண்மையான பொருள்களை குறிப்பிட வேண்டும்.

மேலும், அடுத்த 7 நாள்களுக்குள் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com