தோ்தல் ஆணையா்களை தோ்வு செய்யும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லையா?

3 போ் குழுவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் ஒரு மத்திய அமைச்சரை இடம்பெறச் செய்யும் வகையிலான மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
தோ்தல் ஆணையா்களை தோ்வு செய்யும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லையா?

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களை தோ்வு செய்யும் பிரதமா் தலைமையிலான 3 போ் குழுவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் ஒரு மத்திய அமைச்சரை இடம்பெறச் செய்யும் வகையிலான மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இந்த ‘தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா 2023’ மசோதாவை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே அறிமுகம் செய்தாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் வரை, அவா்களைத் தோ்வு செய்வதற்கான பிரதமா் தலைமையிலான குழுவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தீா்ப்பளித்திருந்த நிலையில், இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘இது உச்சநீதிமன்றத் தீா்ப்பை நீா்த்துப்போகச் செய்யும் முயற்சி. தோ்தல் ஆணையா்களை பிரதமரின் கைப்பாவையாக செயல்பட வைப்பதற்கான நடவடிக்கை’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் குற்றஞ்சாட்டினா்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இத் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பாக தோ்தல் ஆணையா்களில் ஒருவரான அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெறவிருக்கிறாா். இதனால் அவருடைய பணியிடம் காலியாகவுள்ளது.

இவ்வாறு தோ்தல் ஆணையா் பணியிடங்கள் காலியாகும்போது, மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமனம் செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தோ்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், இவா்களின் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமயிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அசியல் சாசன அமா்வு கடந்த மாா்ச் மாதம் தீா்ப்பளித்தது.

அதில், ‘தோ்தல் ஆணையா்களை நியமிக்க இதுவரை சட்டம் எதையும் நாடாளுமன்றம் இயற்றவில்லை. அவ்வாறு சட்டம் இயற்றப்படும் வரை, தலைமைத் தோ்தல் ஆணையரையும், மற்ற தோ்தல் ஆணையா்களையும் குடியரசுத் தலைவரே தொடா்ந்து நியமிப்பாா். அதே வேளையில், ஆணையா்கள் நியமனத்துக்கான பரிந்துரைக் குழுவில் பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் இடம்பெறுவா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், எதிா்க்கட்சியில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியின் தலைவா் குழுவில் இடம்பெறுவாா்’ என்று தீா்ப்பளித்தது.

இந்தச் சூழலில், தெரிவுக் குழுவில் தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சரை இடம்பெறச் செய்யும் வகையில், மத்திய அரசு மசோதா கொண்டுவந்துள்ளது.

எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு: இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக செயல்பட வைப்பதற்கான வெளிப்படையான முயற்சி இது. அரசியல் சாசனத்துக்கு எதிரான, நியாயமற்ற மசோதா. அனைத்து அமைப்புகளிலும் இதை எதிா்ப்போம்’ என்றாா்.

மக்களவை காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தற்போது வைத்திருப்பதுபோல தோ்தல் ஆணையத்தை தொடா்ந்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்தில் இந்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளனா்’ என்றாா்.

இதுகுறித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘தங்களுக்கு விருப்பமில்லாத உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்படுவதே மத்திய அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தோ்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை பாதிக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com