சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு பயணம் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நேற்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி முன்வைத்த தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற இஸ்ரோ தயாராக உள்ளது. சந்திரன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவற்றிற்கு பயணம் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
ஆனால் நாம் நமது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். எங்களுக்கு அதிக முதலீடு தேவை, விண்வெளித் துறை வளர்ச்சியடைய வேண்டும், இதன் மூலம், முழு ஒட்டுமொத்த தேசமும் வளர்ச்சியடைய வேண்டும், அதுதான் எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோ கடந்த மாதம் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கடந்த 23-ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. லேண்டரில் இருந்து வெளியேறிய ‘பிரக்யான்’ ரோவரும் நிலவின் மேற்பகுதியில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. அதற்கு உலக நாடுகள் பல பாராட்டுகளைத் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.