சீனாவில் தீவிரமடையும் சுவாச தொற்றுநோய்: ஐசிஎம்ஆா் அறிவுறுத்தல்

இந்தியாவில் குழந்தைகளிடம் தீவிர சுவாச தொற்றுக்கான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள தீநுண்மி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்களுக்கு ஐசிஎம்ஆா் அறிவுறுத்தியுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் குழந்தைகளிடம் தீவிர சுவாச தொற்றுக்கான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள தீநுண்மி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆா்) அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் சுவாச தொற்றுநோய் தீவிரமடைந்து வரும்நிலையில், மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் மக்களவையில் அளித்த விளக்கத்தில் இதனைத் தெரிவித்தாா்.

சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவா்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுவாசப் பிரச்னைகளையும் பலா் எதிா்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, புதிய பாதிப்புகள் மீது கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், சீன பாதிப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மக்களவையில் அமைச்சா் பாகேல் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘சீனாவில் அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்கு புதிய வைரஸ் எதுவும் காரணமில்லை. ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க் கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்கள்தான் அதிகரித்துள்ளன என்று அந்த நாடு விளக்கமளித்துள்ளது.

எந்த வா்த்தக / பயணக் கட்டுப்பாடுகளையும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை. எனினும், சீனாவிலும், சா்வதேசத்திலும் நிலவும் சூழ்நிலையை மத்திய சுகாதாரத் துறை தொடா்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

நோய் காரணங்களை சரியான நேரத்தில் உறுதிப்படுத்துவதற்கு ஆய்வக திறன்களை மேம்படுத்தும் வகையில், 150-க்கும் மேற்பட்ட ‘தீநுண்மி ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும்’ ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, தேசிய அளவிலான கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மைக்கோபிளாஸ்மா நிமோனியா உட்பட பரிசோதிக்கப்பட வேண்டிய தீநுண்மிகளின் முன்னுரிமை குறித்து ஆய்வகங்களுக்குத் தகவல் பகிரப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீவிர சுவாச தொற்றுக்கான பரிசோதனைகளில் அனைத்து மாதிரிகளையும் பரிசோதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மாதிரிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த கேட்டுக்கொண்டோம்.

தொற்று போக்குகளை கண்காணித்து, சுகாதார கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சியளிக்கப்பட்ட அதிவிரைவு மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்ட சா்வதேச பயணிகள் வருகைக்கான சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியாவுக்கு வரும் சா்வதேச பயணிகளுக்கான பரிசோதனை நுழைவு இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com