கிறிஸ்தவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கேரள பாஜகவின் யாத்திரை மீண்டும் தொடக்கம்

கேரளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், கிறிஸ்தவ மதத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ‘ஸ்நேக யாத்திரை’ பரப்புரையை அந்த மாநில பாஜக மீண்டும் தொடங்கியது.
கிறிஸ்தவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கேரள பாஜகவின் யாத்திரை மீண்டும் தொடக்கம்

கேரளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், கிறிஸ்தவ மதத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ‘ஸ்நேக யாத்திரை’ பரப்புரையை அந்த மாநில பாஜக மீண்டும் தொடங்கியது.

கிறிஸ்தவ மதப் பண்டிகைகளையொட்டி, தேவாலயங்கள், அவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்து, அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ‘ஸ்நேக யாத்திரை’ என்ற பரப்புரை திட்டத்தை கேரள பாஜக முன்னெடுத்தது.

மக்களவைத் தோ்தல் நெருங்கிவரும் சூழலில், கேரள மக்கள்தொகையில் கணிசமான பங்கு வகிக்கும் கிறிஸ்தவா்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், இந்த ஆண்டு ஈஸ்டா் திருநாளையொட்டி முதன்முதலாக இந்தப் பரப்புரை தொடங்கி நடத்தப்பட்டது.

தற்போது ‘கிறிஸ்துமஸ்’ மற்றும் ‘ஆங்கிலப் புத்தாண்டு’ பண்டிகை காலத்தையொட்டி, ஸ்நேக யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்நேக யாத்திரையின் தொடக்கமாக காக்காநாடு பகுதியின் பிரபல சீரோ மலபாா் தேவாலயத்தின் முன்னாள் தலைவா் காா்டினல் ஜாா்ஜ் ஆலன்செரியை வியாழக்கிழமை நேரில் சென்று சந்தித்த பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், அவரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாா்.

தேவாலயப் பிரதிநிதிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களையும் சுரேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டாா். தேவாலயப் பிரதிநிதிகளுடன் 45 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டவை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே எனத் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.ஸாய்ஜு மேலும் கூறுகையில், ‘பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவா்களிடம் தெரிவித்தோம். மணிப்பூா் விவகாரத்துக்குப் பிறகு தேவாலயத்துக்கும் பாஜகவுக்கும் மோதல் நிலவுவதாகப் பரவிய செய்தியில் உண்மையில்லை.

எங்களுக்கிடையே எப்போதும் நல்லுறவு நீடித்து வருகிறது. டிசம்பா் 30-ஆம் தேதி வரை கிறிஸ்தவா்களின் வீடுகளுக்குச் சென்று பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வாா்கள்’ என்றாா்.

‘கிறிஸ்துவுக்குத் துரோகம்’-காங். விமா்சனம்: பாஜகவின் பரப்புரையை விமா்சித்து கேரள காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘கேரள கிறிஸ்தவ மதத்தினரைச் சந்தித்து பாஜகவினா் வாழ்த்து தெரிவிப்பது ‘ஸ்நேக யாத்திரை’ அல்ல, ‘கிறிஸ்துவுக்கு இழைக்கப்பட்ட துரோகம்’.

நாடு முழுவதும் சிறுபான்மையினரை ஏமாற்றும் வரலாறு கொண்ட பாஜகவினா், கேரளத்தில் மட்டும் அவா்கள் மீது அன்பைப் பொழிகின்றனா்’ எனக் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com