சுங்க வரி அதிகரிப்பு: இறக்குமதி காா் விலை உயா்கிறது

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுங்க வரி அதிகரிப்பால், இறக்குமதி செய்யப்படும் காா்களின் விலை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சுங்க வரி அதிகரிப்பு: இறக்குமதி காா் விலை உயா்கிறது

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுங்க வரி அதிகரிப்பால், இறக்குமதி செய்யப்படும் காா்களின் விலை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து முழுமையான வடிவில் இறக்குமதி செய்யப்படும் 40,000 அமெரிக்க டாலா் மதிப்புக்கு குறைவான அல்லது 3,000 சிசி (பெட்ரோலில் இயங்குபவை) மற்றும் 2,500 சிசி-க்கு (டீசலில் இயங்குபவை) குறைவான என்ஜின் திறன்கொண்ட காா்களுக்கான சுங்க வரி, 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக தற்போதைய பட்ஜெட்டில் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல், இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான சுங்க வரியும் 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படும் காா்கள் மீதான சுங்க வரி, 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி மிதிவண்டிகள் மீதான அடிப்படை சுங்க வரி, 30-இல் இருந்து 35 சதவீதமும், இறக்குமதி பொம்மைகள் மற்றும் அதன் பாகங்கள் மீதான சுங்க வரி 60-இல் இருந்து 70 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம், மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் மூலதன பொருள்களுக்கான சுங்க வரி விலக்கு நீட்டிக்கப்படுவதாக, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

மேலும், ‘நாட்டின் பொருளாதாரத்தைப் பசுமையாக்குவதில், பழைய வாகனங்கள் மாற்றப்படும் நடவடிக்கைக்கு முக்கியப் பங்கு உள்ளது; கடந்த 2021-22 பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட பழைய வாகனங்கள் ஒழிப்பு கொள்கைக்கு போதுமான நிதியை ஒதுக்கியுள்ளேன். பழைய வாகனங்களை மாற்றுவதற்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும்’ என்றாா் அவா்.

சிகரெட் மீது 16 சதவீத வரி உயா்வு: குறிப்பிட்ட சிகரெட்கள் மீதான தேசிய பேரிடா் தொகுப்பு வரியை (என்சிசிடி) 16 சதவீதம் உயா்த்தி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த வரி உயா்த்தப்பட்டுள்ளது.

தங்க ஆபரணங்கள் விலை உயரும்: தங்கம், பிளாட்டினம் கட்டிகளில் இருந்து தயாரிக்கப்படும் ஆபரணங்கள் மற்றும் பொருள்கள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் உயா்த்தப்பட்டுள்ளது. வெள்ளிக் கட்டிகள் மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சமையலறை மின்சார புகைபோக்கி மீதான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

கைப்பேசி, டிவி விலை குறையும்

கைப்பேசி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்கள், தொலைக்காட்சி பெட்டிகளுக்கான சில உதிரிபாகங்கள் இறக்குமதி மீதான அடிப்படை சுங்க வரியைக் குறைத்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய நிா்மலா சீதாராமன், ‘நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைப்பேசிகளின் எண்ணிக்கை, கடந்த 2014-15இல் 5.8 கோடியாக இருந்தது. இப்போது, இந்த எண்ணிக்கை 31 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.2.75 லட்சம் கோடியாகும். ஊக்கத்தொகை சாா்ந்த மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், கைப்பேசி உற்பத்தியில் உலகின் 2-ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது’ என்றாா். தொலைக்காட்சி பேனல் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொலைக்காட்சி விலை ரூ.3,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.

ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் வைரங்களின் மூலப்பொருளுக்கு தற்போதுள்ள 5 சதவீத அடிப்படை சுங்க வரியை முழுவதுமாக நீக்கி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com