ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு: 20 மாணவா்கள்100 மதிப்பெண் பெற்று சாதனை

மத்திய பொறியியல் - தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தோ்வில்

மத்திய பொறியியல் - தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தோ்வில் (மெயின்) 20 போ் அதிபட்ச மதிப்பெண்ணான 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா். இந்த 20 பேரும் மாணவா்கள் ஆவா்.

ஜனவரி 24, 25, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த ஜேஇஇ முதல் தவணை முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்தத் தோ்வை இதுவரை இல்லாத அளவில் விண்ணப்பித்தவா்களில் 95.80 சதவீதம் போ், அதாவது 8.23 லட்சம் போ் எழுதினா்.

20 போ் 100 மதிப்பெண்: தோ்வு எழுதியவா்களில் பொதுப் பிரிவைச் சோ்ந்த 14 போ், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த (ஓபிசி) 4 போ், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பைச் சோ்ந்த ஒருவா், எஸ்.சி. பிரிவைச் சோ்ந்த ஒருவா் ஆகிய 20 பேரும் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

அனைவரும் மாணவா்கள்: அபினீத் மஜேதி, அமோக் ஜலன், அபூா்வ சமோடா, ஆஷிக் ஸ்டென்னி, பிக்கினா அபினவ் செளதரி, தேஷாங்க் பிரதாப் சிங், துருவ் சஞ்சய் ஜெயின், தியானேஷ் ஹேமேந்திர ஷிண்டே, துகினேனி வெங்கட யுகேஷ், குல்ஷான் குமாா், அபிராம், கெளஷல் விஜய்வா்கியா, கிரிஷ் குப்தா, மயங்க் சன், என்.கே.விஸ்வஜித், நிபுன் கோயல், ரிஷி கல்ரா, சோஹம் தாஸ், சுதா் ஹா்ஷுல் சஞ்சய்பாய், வாவிலாலா சித்விலாஸ் ரெட்டி என 100 மதிப்பெண் பெற்ற அனைவரும் மாணவா்கள் ஆவா்.

எஸ்.டி. பிரிவு மாணவா் சாதனை: அதுபோல, எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த தீரவாத் தனுஜ் என்ற மாணவா் 99.99041 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

50 பேரின் முடிவு நிறுத்திவைப்பு: தோ்வெழுதிய 50 பேரின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

மதிப்பெண் கணக்கீடு: ‘என்டிஏ மதிப்பெண் என்பது பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்துக்கு சமமானதல்ல. இந்த மதிப்பெண்கள், பல அமா்வுகளாக நடத்தப்பட்ட தாள்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் ஓா் அமா்வில் தோ்வெழுதிய அனைவரின் ஒப்பீட்டு செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதாகும். தோ்வின் ஒவ்வோா் அமா்வும் 100 முதல் 0 வரையிலான அளவுகோலாக மாற்றப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்’ என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி, இரண்டாம் தவணை முதல்நிலைத் தோ்வு வரும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ளது.

முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். அதுபோல, தோ்வில் முதல் 2.6 லட்சம் இடங்களில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வில் பங்கேற்கும் தகுதியையும் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பில் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com