2014-க்குப் பிறகு அதானியின் வளர்ச்சியில் மாய வித்தை: மக்களவையில் ராகுல் பேச்சு

2014-இல் உலக பணக்காரர்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்து கெளதம் அதானி, மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்;
2014-க்குப் பிறகு அதானியின் வளர்ச்சியில் மாய வித்தை: மக்களவையில் ராகுல் பேச்சு

2014-இல் உலக பணக்காரர்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்து கெளதம் அதானி, மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்; 2014-க்குப் பிறகு அவரது இந்த வளர்ச்சியில் மாய வித்தை நடந்திருக்கிறது என்றார் ராகுல் காந்தி.
 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல வெளிநாட்டு ஒப்பந்தங்களை கெளதம் அதானி பெற பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்ததாகக் குற்றம்சாட்டினார். அவர் பேசியது:
 நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) வெளிநாட்டுப் பயணம் செய்தபோது அங்கு உங்களை எத்தனை முறை சந்தித்திருப்பார்? வெளிநாடுகளில் நீங்கள் இருக்கும்போது ஒப்பந்தங்களைப் பேசி முடிக்க எத்தனை முறை அவர் அங்கு பயணித்திருப்பார்? தேர்தல் பத்திரங்கள் உள்பட கடந்த 20 ஆண்டுகளில் பாஜகவுக்கு கெளதம் அதானி எவ்வளவு பணம் நன்கொடையாகத் தந்தார்?
 பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீங்கள் (பிரதமர் மோடி) பேசுகையில், ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிடெட் மீது நாங்கள் பல விமர்சனங்களை வைத்ததாக எங்களைக் குற்றம்சாட்டினீர்கள். ஆனால், உண்மையில் எச்ஏஎல் 126 போர் விமான ஒப்பந்தங்கள் அனில் அம்பானி நிறுவனத்துக்குச் சென்றது எப்படி?
 எனது நடைப்பயணத்தின்போது அதானி இத்தனை தொழில்களை லாபகரமாக எப்படிச் செய்ய முடிகிறது என்று பொதுமக்கள் என்னிடம் கேட்டார்கள். மோடிக்கும் அதானிக்கும் இடையே என்ன தொடர்பு எனக் கேட்டனர்.
 கடந்த 2014-2022 வரையிலான அவரது சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலரில் (ரூ.66,000 கோடி) இருந்து 140 பில்லியன் டாலர் (ரூ.11 லட்சம் கோடி) அளவுக்கு உயர்ந்தது எப்படி என்றும், எப்படி ஒரு மனிதர் பிரதமருடன் தோளோடு தோளாக செல்வாக்குடன் பழக முடியும் என்றும் பொதுமக்கள் கேட்டனர்.
 அதானிக்கும் மோடிக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளுக்கு முன் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே ஏற்பட்டதாகும். குஜராத்தை கட்டமைக்க மோடிக்கு அவர் உதவினார். குஜராத்தில் தொழில் அதிபர்களை ஒரு குழுவாக அமைப்பதில் பின்புலமாக இருந்தவர் அதானி. அப்போதுதான் மாய வித்தை ஆரம்பித்திருக்கிறது.
 2014-இல் மோடி தில்லிக்கு எப்போது வந்தாரோ அப்போதுதான் அதானியின் மாயவித்தை உண்மையில் தொடங்கி இருக்கிறது. அந்த காலகட்டத்தில் உலக பணக்காரர்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்த அதானி, அதன் பிறகு 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
 கெளதம் அதானி பங்குச் சந்தைகளில் நிதி மோசடிகளை செய்து வருவதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்தோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டோ விசாரணை நடத்த வேண்டும்.
 விமான நிலையங்களை மேம்படுத்த முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் ஈடுபட முடியாது என்ற சட்ட விதியை அதானிக்காக இந்த அரசு திருத்தியது. அதைத் தொடர்ந்து நாட்டில் லாபகரமாக இயங்கிய 6 விமான நிலையங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தை கையாண்டு வந்த ஜிவிகே நிறுவனத்திடமிருந்து மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளின் உதவியுடன் மாற்றி அந்த விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தனர் என்றார்.
 ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக எம்.பி.க்கள், குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறும், பிரதமருக்கு எதிராக உரிய ஆவணங்கள் இன்றி குற்றச்சாட்டு தெரிவிக்கக் கூடாது என்றும் கூறினர்.
 கூச்சலுக்கு இடையே குறுக்கிட்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, குற்றச்சாட்டுகளை விடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிப்பது பற்றி பேசுமாறு ராகுல் காந்தியிடம் கூறினார்.
 ராகுல் தொடர்ந்து பேசுகையில், அதானி இதற்கு முன் ட்ரோன்களைத் தயாரித்ததில்லை. இதை எச்ஏஎல் நிறுவனமும் பிற நிறுவனங்களும்தான் வழக்கமாக செய்து வந்தன. பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்றதும் அதானி ட்ரோன்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் அதானிக்கு வழங்கப்பட்டது. அதானிக்கு நான்கு பாதுகாப்பு தளவாடப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதற்கு முன்பு அவர்கள் சிறு ஆயுதங்கள், துப்பாக்கிகள் போன்றவற்றைக் கூட தயாரிக்கவில்லை.
 நான் நடைப்பயணம் மேற்கொண்டபோது அதானி குழுமத்துக்கு எல்ஐசியின் நிதி ஏன் வழங்கப்படுகிறது என்று மக்கள் என்னிடம் கேட்டனர். பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அதானிக்கு இந்த அரசு எவ்வாறு வழங்குகிறது என்றார்.
 ராகுல் பேச்சுக் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிரதமர் மோடியின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com