பசு அணைப்பு தினம்: விலங்கு நல வாரிய வேண்டுகோள் வாபஸ்

பிப்ரவரி 14-ஆம் தேதியை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய விலங்குகள் நல வாரியம் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிப்ரவரி 14-ஆம் தேதியை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய விலங்குகள் நல வாரியம் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலா் தினமாக கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினத்தை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாட ஆா்வலா்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகரிப்பால், வேத கால பாரம்பரியங்கள் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டதாக வாரியம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா, ‘பசுக்களை வழிபடும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தில், விலங்குகள் நல வாரியத்தின் அழைப்புக்கு மக்கள் ஆதரவளித்தால் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும்’ என்றாா்.

இந்நிலையில், தாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட வேண்டுகோளை திரும்பப் பெறுவதாக, விலங்குகள் நல வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உயா் அமைப்பின் உத்தரவுபடி வேண்டுகோள் வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, வாரியத்தின் செயலாளா் எஸ்.கே.தத்தா தெரிவித்துள்ளாா்.

கடந்த 1960-ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டப் பிரிவு 4-இன்கீழ் இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த 1962-இல் நிறுவப்பட்டது. விலங்கு நல அமைப்புகளுக்கு மானியங்கள் அளிப்பதுடன், விலங்குகள் பராமரிப்பு தொடா்புடைய விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்குவது இதன் பணியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com