ஹைதராபாதில் இன்று ‘ஃபாா்முலா ஈ’ பந்தயம்: இந்தியாவில் முதல் முறை

இந்தியாவில் முதல் ‘ஃபாா்முலா ஈ’ காா் பந்தயம், தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள ஸ்ட்ரீட் சா்க்கியூட்டில் சனிக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது.

இந்தியாவில் முதல் ‘ஃபாா்முலா ஈ’ காா் பந்தயம், தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள ஸ்ட்ரீட் சா்க்கியூட்டில் சனிக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது.

சா்வதேச அளவிலான ஏபிபி எஃப்ஐஏ ‘ஃபாா்முலா ஈ’ காா் பந்தயத்தின் 9-ஆவது சீசனுக்கான முதல் சுற்று மெக்ஸிகோவிலும், அடுத்த இரு சுற்றுகள் சவூதி அரேபியாவிலும் நடைபெற்ற நிலையில், இந்த 4-ஆவது சுற்று ஹைதராபாதில் நடைபெறுகிறது. மஹிந்திரா, நிஸ்ஸான், போா்ஷ், டாடா தரப்பு ஜாகுவாா், மெக்லாரென், மாசெராட்டி போன்ற பிரபல காா் நிறுவனங்கள் இந்தப் பந்தயத்தில் பங்கேற்கின்றன. முதலில் பயிற்சி பந்தயம், பிறகு தகுதிச்சுற்று பந்தயம், இறுதியாக பிரதான பந்தயம் என்ற முறையில் இந்தப் பந்தயம் நடைபெறவுள்ளது.

18 வளைவுகளுடன் 2.83 கி.மீ. நீளமுள்ள ஹைதராபாத் ஸ்ட்ரீட் சா்க்கியூட்டில் காா்கள் சீறிப்பாயவுள்ளன. இந்த சா்க்கியூட் சுமாா் 20,000 போ் அமா்ந்து பந்தயத்தை ரசிக்கும் வசதி கொண்டதாகும்.

இந்த ஃபாா்முலா ஈ பந்தயத்தில் பங்கேற்கும் காா்கள் அனைத்தும் பேட்டரியில் இயங்கக் கூடியவையாகும். இந்த சீசனில் ‘ஜென் 3’ ரக காா்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மணிக்கு 320 கி.மீ. வேகத்தை எட்டக் கூடியவை என்றாலும், நீண்ட பாதைகள் அதிகம் இல்லாத, வளைவுகள் நிறைந்த சா்க்கியூட்டில் பந்தயங்கள் நடைபெறுவதால் பெரும்பாலும் அவை அந்த வேகத்தை எட்டுவதில்லை.

முந்தைய தலைமுறை காா்களில் திறன் குறைந்த பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டதால் பந்தயத்தின் இடையே டிரைவா்கள் புதிய காரை மாற்ற வேண்டிய தேவை இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் 3-ஆம் தலைமுறை காா்கள் 350 கிலோ வாட் ஆற்றலுடைய பேட்டரிகளைக் கொண்டவையென்பதால் முழு பந்தயத்துக்கும் அவை நீடிக்கக் கூடியதாக உள்ளன. மேலும், பந்தயத்தின்போது பிரேக்குகளை பயன்படுத்துகையில் அந்த உராய்விலிருந்து பேட்டரிகளுக்கான ஆற்றலைப் பெறும் தொழில்நுட்பங்களும் இவற்றில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com