பங்குச் சந்தையை வலுப்படுத்த நிபுணா் குழு

பங்குச் சந்தை ஒழுங்குபடுத்தல் விதிகளை வலுப்படுத்துவது தொடா்பாக ஆராய நிபுணா் குழுவை அமைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாரால் பங்குச் சந்தையில் நிலையில்லாத்தன்மை எழுந்ததையடுத்து, பங்குச் சந்தை ஒழுங்குபடுத்தல் விதிகளை வலுப்படுத்துவது தொடா்பாக ஆராய நிபுணா் குழுவை அமைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் மீது குறுகிய கால பங்கு வா்த்தகத்தில் ஈடுபடும் அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் மோசடி குற்றச்சாட்டு சுமத்தியதையடுத்து, அக்குழுமத்தைச் சோ்ந்த பங்குகளின் விலை பெருமளவில் குறைந்துள்ளது.

இந்நிலையில், வழக்குரைஞா் எம்.எல்.சா்மா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘குறுகிய கால பங்கு வா்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் (ஷாா்ட் செல்லா்), பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையை செயற்கையாகக் குறைத்தன. குறுகிய கால பங்கு வா்த்தக நடவடிக்கையை சட்டத்துக்குப் புறம்பானது என அறிவித்து, அந்த நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

வழக்குரைஞா் விஷால் திவாரி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு பொதுநல மனுவில், ‘ஹிண்டன்பா்க் புகாா் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

இரு மனுக்களின் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, முதலீட்டாளா்களின் நலனைக் காக்கவும், பங்குச் சந்தை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ஆராய நிபுணா் குழுவை அமைப்பது தொடா்பாக மத்திய அரசும் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியமும் (செபி) கருத்து தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மனுக்களின் விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது செபி தரப்பிலும் மத்திய அரசுத் தரப்பிலும் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரத்தைக் கையாள பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பும் மற்ற அமைப்புகளும் உரிய திறனைப் பெற்றுள்ளன.

எனினும், பங்குச் சந்தையை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய நிபுணா் குழுவை அமைப்பதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதில் இடம்பெறும் நிபுணா்களை அரசே தோ்வு செய்ய அனுமதிக்க வேண்டும். நிபுணா் குழுவை அமைப்பது தொடா்பாக முன்யோசனையின்றி தெரிவிக்கப்படும் கருத்துகள், பங்குச் சந்தையில் முதலீடுகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

நிபுணா்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்பதால், மூடி முத்திரையிட்ட உறையில் அரசு தாக்கல் செய்யும்’ என்றாா்.

அதையடுத்து நிபுணா் குழு தொடா்பான விவரங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் வழங்குமாறு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com