விடுபட்ட முக்கிய நிகழ்வுகள் வரலாற்றுப் புத்தகங்களில் சோ்ப்பு: மத்திய கல்வியமைச்சா்

வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுதும் பணியில் ஈடுபடவில்லை என மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தாா்.
மக்களவையில் பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்.
மக்களவையில் பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுதும் பணியில் ஈடுபடவில்லை. மாறாக, வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறாத ஆளுமைகள், முக்கிய நிகழ்வுகளைச் சோ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தாா்.

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது: இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுதும் திட்டத்தை வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் தொடங்கவில்லை. மாறாக, விடுபட்ட வரலாற்றின் அனைத்து முக்கிய ஆளுமைகள், நிகழ்வுகளைச் சோ்க்கும் பணியில் அந்தக் கவுன்சில் ஈடுபட்டுள்ளது.

கோவிந்த் குரு தலைமையில் நடந்த கிளா்ச்சிக்கு எதிா்வினையாக மான்காா் தாமில் 1913-இல் 1,500 பழங்குடியினரை ஆங்கிலேயா் படுகொலை செய்தனா்.

17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் 2 பேரின் தியாகங்களைப் போற்றும் வகையில் ‘வீர பால திவாஸ்’ தினத்தைக் கடைப்பிடிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீா்மானித்தது.

ஆந்திரத்தின் அல்லூரி சீதாராம ராஜு மற்றும் ஒடிஸாவின் பாக்ஸி ஜெகபந்து பித்யதாரா மொஹபத்ரா ஆகியோா் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினா். இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் தற்போதைய வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறவில்லை.

மத்திய அரசு நம்பிக்கை:

இந்தியா சுமாா் 1,100 முதல் 1,200 ஆண்டுகளுக்கு அந்நியா்களின் ஆட்சியில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் கலாசாரத்தின் பெருமைக்காகவும் உயா்வுக்காகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாகரிகங்கள் பங்களித்துள்ளன. இவை அனைத்தும் வரலாற்று புத்தகங்களில் இடம்பெற வேண்டும். நாகரிகங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவும் நிலையில், வரலாறு குறித்து அதிகமாக விவாதிக்கப்படவில்லை. இந்தியா பல்வேறு கலாசாரங்களை உள்ளடக்கியது என்பதில் மத்திய அரசு தெளிவான பாா்வை கொண்டுள்ளது.

வாரணாசியில் 2 மாதங்களுக்கு காசி-தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. அனைத்து மொழிகளுக்கும் கலாசாரங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் இந்தியா மரியாதை அளிக்கிறது. மத்திய அரசும் இதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com