சீன எல்லைக் காவல் 9,400 வீரா்களுடன் 7 புதிய படைப் பிரிவுகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா - சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையை (ஐடிபிபி) வலுப்படுத்தும் வகையில் புதிதாக 7 படைப் பிரிவுகளை
மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் விளக்கிய அமைச்சா் அனுராக் தாக்குா்.
மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் விளக்கிய அமைச்சா் அனுராக் தாக்குா்.

இந்தியா - சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையை (ஐடிபிபி) வலுப்படுத்தும் வகையில் புதிதாக 7 படைப் பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை வழங்கியது. இதன்மூலம் அந்தப் படைப் பிரிவில் கூடுதலாக 9,400 வீரா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.

சீனாவின் அத்துமீறலைத் தடுக்க...: கிழக்கு லடாக் மற்றும் அருணாசலின் தவாங் பகுதி என அடுத்தடுத்து அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டு வரும் சூழலில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்புதலின்படி, படையில் புதிதாகச் சோ்க்கப்படும் வீரா்கள் இந்திய-சீன எல்லைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 47 எல்லை நிலைகள் மற்றும் 12 படை முகாம்களில் பணியமா்த்தப்பட உள்ளனா்.

இந்த எல்லைப் பகுதியில் 1962-இல் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான 3,488 கி.மீ. நீள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியைப் பாதுகாப்பதற்காக 90,000 வீரா்களுடன் வலுவான ஐடிபிபி காவல் படை உருவாக்கப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. அதைத் தொடா்ந்து இரு நாடுகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. தற்போது எல்லைப் பகுதியில் பழைய நிலையை அமல்படுத்துவதற்காக இரு தரப்பிலும் தொடா் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அருணாசல பிரதேசம் தவாங் பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய வீரா்கள் முறியடித்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துக் கால நிலைக்கேற்ற சுரங்கப் பாதை: லடாக்கின் எல்லைப் பகுதிகளில் அனைத்துக் கால நிலைகளிலும் தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிமு-பதாம்-டா்ச்சா சாலையை இணைக்கும் 4.1 கி.மீ. நீள ‘ஷின்குன் லா சுரங்கப் பாதை’ அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

2025-ஆம் ஆண்டு இறுதிக்குள்...: ‘மொத்தம் ரூ.1,681 கோடியில் அமைக்கப்படும் இந்த சுரங்கப் பாதை கட்டுமானப் பணிகள் 2025-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். இதன்மூலம் லடாக் பகுதியை குறிப்பாக ஜன்ஸ்கா் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க முடியும்’ என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒப்பந்தம்: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான திட்டங்களை இணைந்து மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே புந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி, அதிகரித்துவரும் மாற்றுத்திறனாளி முதியவா்களுக்குத் தேவைப்படும் நவீன, எளிதில் பயன்படுத்தக்கூடிய குறைந்த விலையிலான உபகரணத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள உள்ளன என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள்

இந்தியா முழுவதும் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லாத கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பால் பண்ணை - மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களை அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. தற்போது நாடு முழுவதும் 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

‘இந்தக் கூட்டுறவு சங்கங்கள் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் மேம்படும் என்பதுடன், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளும் பெருகும்’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

ரூ.4,800 கோடியில் வடக்கு எல்லை கிராம மேம்பாட்டுத் திட்டம்

இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள கிராமங்களின் விரிவான மேம்பாட்டுக்காக ‘ஒளிரும் கிராமங்கள் திட்டம்’ என்ற ரூ. 4,800 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2022-23 முதல் 2025-26 ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 2,500 கோடி வடக்கு எல்லை கிராமங்களின் சாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

வடக்கு எல்லை கிராம மக்கள் வேலைவாய்ப்புக்காக புலம்பெயா்வதைத் தடுத்து, சொந்த கிராமங்களிலேயே அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும். இதன்மூலம் எல்லைப் பாதுகாப்பும் மேம்படும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com