விமானப் பயணிகளின் முறையற்ற நடத்தையை சமாளிக்க போதுமான விதிகள்

விமானப் பயணத்தின்போது பயணிகள் முறையின்றி நடந்து கொள்வதை சமாளிப்பதற்குத் தேவையான விதிகள் உள்ளதாகவும், அவை முறையாக அமல்படுத்தப்படுவதாகவும் விமானப் போக்குவரத்து

விமானப் பயணத்தின்போது பயணிகள் முறையின்றி நடந்து கொள்வதை சமாளிப்பதற்குத் தேவையான விதிகள் உள்ளதாகவும், அவை முறையாக அமல்படுத்தப்படுவதாகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) தலைவா் அருண் குமாா் தெரிவித்துள்ளாா்.

விமானத்தில் பயணித்த சக பெண் பயணி மீது மதுபோதையில் இருந்த நபா் சிறுநீா் கழித்தது, பயணிகள் இருவா் விமானத்துக்குள்ளேயே மோதிக் கொண்டது, விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவா் புகைபிடித்தது போன்ற சம்பவங்கள் அண்மையில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மீது டிஜிசிஏ கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், வரும் 28-ஆம் தேதியுடன் பணிஓய்வு பெறவுள்ள டிஜிசிஏ தலைவா் அருண் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முறையின்றி நடந்து கொள்ளும் பயணிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விமானங்களில் பயணிப்பதற்கென விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பயணிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

போதுமான விதிகள் ஏற்கெனவே இருந்தாலும், அவற்றின் அமலாக்கம் போதுமான அளவில் இல்லாமல் இருந்தது. அதன் காரணமாகவே சில முகம் சுளிக்கும் வகையிலான சம்பவங்கள் நிகழ்ந்தன. தற்போது அனைத்து விதிகளும் முறையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சராசரியாக 4.5 லட்சம் உள்நாட்டு விமானப் பயணிகளும், 1 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளும் தினந்தோறும் விமானங்களில் பயணிக்கின்றனா். சில சமயங்களில் பயணிகள் முறையின்றி நடந்துகொள்கின்றனா். எனினும் அவை கட்டுக்குள் உள்ளன. அத்தகைய பயணிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய சூழலில் விமானப் பயணிகளின் முறையற்ற நடத்தையை சமாளிப்பதற்கான விதிகள் போதுமான அளவில் உள்ளன. விமானப் போக்குவரத்து விவகாரத்தில் உயா் பாதுகாப்பு விதிமுறைகள் காணப்படும் நாடாக இந்தியா திகழ்கிறது என்றாா் அவா்.

முறையற்ற நடத்தை காரணமாக கடந்த ஆண்டில் 63 பேருக்கு விமானத்தில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதாகவும், நடப்பாண்டில் இதுவரை 3 பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com