அனைவருக்கும் பார்வை அளிக்க அவசர நடவடிக்கை அவசியம்: உலக சுகாதார அமைப்பு

அனைவருக்கும் பார்வை அளிக்கவும் ஒவ்வொருவருக்கும் கண் பாதுகாப்பு அளிக்கவும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பார்வை அளிக்கவும் ஒவ்வொருவருக்கும் கண் பாதுகாப்பு அளிக்கவும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 உலகம் முழுவதிலும் உள்ள பார்வையற்றோர் அல்லது கண் நோய்களைக் கொண்ட 220 கோடி பேரில் 30 சதவீதம் பேர் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியப் பிரிவின் மண்டல இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், "கண் நலனுக்கு ஒருங்கிணைந்த மக்கள்' என்ற தலைப்பில் ஹைதராபாதில் நடைபெறும் 3 நாள் நிகழ்வில் உறுப்பு நாடுகளுக்கிடையே பேசியதாவது:
 தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கண் நோய்களால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர். இந்தச் சுமை ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. உலக அளவில் பார்வைக் கோளாறுகளில் பாதி அளவு கோளாறுகள் முன்கூட்டியே தடுத்திருக்கப்பட்டிருக்க வேண்டியவை அல்லது இனிமேல்தான் கவனிக்கப்பட வேண்டியவை.
 இந்த விவகாரத்தில் குழந்தைகளும் முதியோரும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பெண்கள், ஊரக மக்கள், சிறுபான்மைக் குழுவினர் ஆகியோர் பார்வைக் கோளாறுகளைக் கொண்டவர்களாகவும், கண் சிகிச்சை வசதி கிடைக்காதவர்களாகவும் உள்ளனர்.
 தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பார்வைக் கோளாறுகளை அதிகம் கொண்டவர்கள் சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கடந்த 2019-இல் இந்தப் பிராந்தியத்தில் 8.76 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3.6 கோடி பேர் சர்க்கரை நோய் சார்ந்த கண் நோய்களாலும், 96 லட்சம் பேர் சர்க்கரை நோய் சார்ந்த பார்வையிழப்பாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றார்.
 ஹைதராபாதில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வில் உலக சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், திட்ட மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
 கண் நலனுக்கான ஒருங்கிணைந்த மக்கள் செயல்திட்டத்துக்கு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
 இந்த நிகழ்வுக்கு எல்.வி. பிரசாத் கண் ஆராய்ச்சி நிறுவனம் ஆதரவு அளிக்கிறது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒளிவிலகல் பிழை பாதிப்பைக் கொண்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு சிகிச்சை, கண்புரை பாதிப்பு கொண்டோரில் 30 சதவீதம் பேருக்கு அறுவைசிகிச்சை, சர்க்கரை நோய் பாதிப்பைக் கொண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு கண் பரிசோதனை, சர்க்கரை நோய் பாதிப்பைக் கொண்டோரில் பார்வை இழப்பு அபாயத்தைக் கொண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு சிகிச்சை ஆகியவற்றை உறுப்பு நாடுகள் நோக்கமாகக் கொண்டு செயல்பட செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com