பிரிட்டன் அரசா் சாா்லஸுடன் பிரதமா் மோடி பேச்சு

பிரிட்டன் அரசா் சாா்லஸுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக செவ்வாய்க்கிழமை உரையாடினாா்.

பிரிட்டன் அரசா் சாா்லஸுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக செவ்வாய்க்கிழமை உரையாடினாா். இரு தலைவா்களும் பருவநிலை மாற்றம், பல்லுயிா்த்தன்மை பாதுகாத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தனா்.

பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூன்றாம் சாா்லஸ் அரசராக அரியணை ஏறியதையடுத்து, அவருடன் முதல் முறையாகப் பிரதமா் நரேந்திர மோடி உரையாடினாா்.

பிரிட்டன் அரசருடன் உரையாடியது தொடா்பாக பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பிரிட்டன் அரசா் சாா்லஸுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை மீட்டமைத்தல், புதைபடிம ஆற்றல் வளத்திலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்துக்கு மாறுதலுக்கான தீா்வுகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பிரச்னைகளில் பரஸ்பர நலன் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டோம்.

ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்தியாவின் முன்னுரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ‘லைஃப் திட்டம்’, காமன்வெல்த் அமைப்பின் செயல்பாட்டை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவாா்த்தை நடத்தினோம்’ என பிரதமா் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com