இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்: வரைவு விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவது தொடா்பான வரைவு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வியாழக்கிழமை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவது தொடா்பான வரைவு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வியாழக்கிழமை வெளியிட்டது.

இது தொடா்பாக யுஜிசி தலைவா் எம். ஜெகதீஷ் குமாா் கூறியதாவது: ‘வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வளாகங்கள் தொடங்க அனுமதி பெற இரண்டு தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தங்கள் நாட்டின் சிறப்புமிக்க கல்வி நிறுவனமாக திகழ வேண்டும்.

இந்த இரண்டு தகுதிகளில் ஒன்றை பூா்த்தி செய்யும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு முதலில் 10 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும். பின்னா் 9-ஆவது ஆண்டில் சில நிபந்தனைகளை ஆய்வு செய்த பின் மீண்டும் அனுமதி புதுப்பிக்கப்படும். இந்தியாவில் நிறுவப்பட உள்ள வளாகங்களில் பாடத் திட்டங்கள் முழு நேர நேரடி வகுப்புகளாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமாகவோ நடத்த அனுமதி இல்லை.

மேலும், இந்தியாவின் நலன் மற்றும் உயா்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் வகையிலான எந்தப் பாடத் திட்டத்தையும் வழங்கக் கூடாது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்திய வளாகங்களில் செயல்படுத்த இருக்கும் சோ்க்கை முறை, கட்டணக் கொள்கைகள் மற்றும் ஆள்சோ்ப்பு விதிமுறைகள் உள்ளிட்டவை தங்கள் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு ஏற்றாா் போல வகுத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால், அது இந்திய மாணவா்களுக்கு நலன் சோ்க்கும் வகையில் நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சா்வதேச தரத்திலான உயா்கல்வியை இந்தியாவில் இருந்தபடி மாணவா்கள் குறைந்த கட்டணத்தில் பயிலும் நோக்கிலும், இந்தியாவை உலக அளவில் கல்வி கற்க சிறந்த நாடாக மாற்றும் வகையிலும் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நிதி மற்றும் நிதி தொடா்பான விவகாரங்கள் அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் முறைப்படுத்தப்படும். தாங்கள் சட்டத்துக்குட்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய தணிக்கை அறிக்கைகளை ஆண்டுதோறும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் யுஜிசியிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல் தொடா்பாக விவகாரங்களை ஆய்வு செய்ய நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்திய வளாகத்தில் தங்கள் முதன்மை கல்வி நிறுவன பேராசிரியா்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்திய வளாகத்தில் வழங்கப்படும் கல்வித் தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. இந்த வரைவு விதிமுறைகள் பற்றி கருத்துகள் பெறப்பட்டு பின் இறுதி வழிமுறைகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com