இந்திய நேரத்தை சீராக கடைப்பிடிக்க விரைவில் கொள்கை

தொலைத்தொடா்பு நிறுவனங்கள், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை துல்லியமான இந்திய நேரத்தை (ஐஎஸ்டி)
மத்திய அரசு
மத்திய அரசு

தொலைத்தொடா்பு நிறுவனங்கள், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை துல்லியமான இந்திய நேரத்தை (ஐஎஸ்டி) பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குவதற்கான கொள்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் தலைநகா் லண்டன் வழியே செல்லும் கிரீன்விச் கோட்டை அடிப்படையாகக் கொண்டே உலக நேரம் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு நிலவும் நேரத்தைவிட இந்திய நேரம் ஐந்தரை மணி நேரம் முன்கூட்டிச் செல்கிறது (ஜிஎம்டி+5.30). இதுவே இந்தியன் ஸ்டாண்டா்ட் டைம் (ஐஎஸ்டி) என்னும் இந்திய நேரம். நாடு முழுமைக்கும் இந்த ஒரே நேரமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும், அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்கள், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை துல்லியமான இந்திய நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அமெரிக்காவின் செயற்கைக்கோள்கள் அமைப்பு உள்ளிட்ட மற்ற தளங்கள் வழங்கும் நேரத்தை அவை கடைப்பிடித்து வருகின்றன.

இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அதிகாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இஸ்ரோ, தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவற்றுடன் இணைந்து துல்லிய இந்திய நேரத்தை (ஐஎஸ்டி) அனைத்து நிலைகளிலும் கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

அதிகாரபூா்வ இந்திய நேரத்தை அனைத்து நிறுவனங்களும் கட்டாயமாக கடைப்பிடிப்பதற்கான விரிவான கொள்கையும் வகுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்காக கலந்தாலோசனை நடத்தப்பட்டு விரிவான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டில் செயல்படும் கணினிகள், தேசப் பாதுகாப்பு விவகாரங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளிட்டவை துல்லியமான இந்திய நேரத்துடன் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியது அவசியம்.

இந்திய நேரத்தைத் துல்லியமாக வழங்குவதற்கான கட்டமைப்பை அகமதாபாத், பெங்களூரு, புவனேசுவரம், ஃபரீதாபாத், குவாஹாட்டி ஆகிய 5 இடங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி அனைத்து நிறுவனங்களும் சீரான இந்திய நேரத்தைத் துல்லியமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தேசியப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு சீரற்ற நேரத்தின் அடிப்படையிலான தவறுகள் சரி செய்யப்படும்.

ஒரு விநாடியில் 100 கோடி பங்கு என்ற அளவிலான நேர துல்லியத்தன்மை உயா் அறிவியல் ஆராய்ச்சியில் தேவைப்படுகிறது.

செயற்கைக்கோள் செயல்பாடு, தொலைத்தொடா்பு, இணைய சேவை வழங்குதல், வங்கி கட்டமைப்புகள், எண்ம நிா்வாகம், போக்குவரத்து கட்டமைப்புகள், இணையவழி பணப் பரிவா்த்தனை, பாதுகாப்பு கட்டமைப்புகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துல்லிய நேரத்தின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com