நக்ஸல் நடவடிக்கைகள் 2024 தோ்தலுக்குள் ஒழிக்கப்படும்: அமித் ஷா

நாட்டில் நக்ஸல் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.
ஜாா்க்கண்டின் சாய்பாசாவில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
ஜாா்க்கண்டின் சாய்பாசாவில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

நாட்டில் நக்ஸல் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, கோா்பா பகுதியில் உள்ள இந்திரா அரங்கில் பாஜக பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியதாவது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2009-ஆம் ஆண்டில் நக்ஸல் நடவடிக்கைகள் 2,258-ஆக இருந்தன. கடந்த 2021-ஆம் ஆண்டில் அது 509-ஆகக் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறுவதற்குள் நாட்டில் நக்ஸல் நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நக்ஸல் பாதிப்பு அதிகமாகக் காணப்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்குக் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆயுதங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. மாநிலத்தில் ஊழல் பெருமளவில் அதிகரித்துள்ளது; குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியினருக்குச் சொந்தமான காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளன.

மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்கும் தொகை அனைத்தையும் சொந்தப் பயன்பாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினா் உபயோகித்து வருகின்றனா். நடப்பாண்டில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றுவதே அவா்களுக்கு மக்கள் வழங்கும் தண்டனையாக இருக்கும்.

மத்தியில் ஏற்கெனவே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்திலும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் வளா்ச்சி துரிதமடையும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நீட் தோ்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த வகுப்பைச் சோ்ந்த தொழில்முனைவோா்களுக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஜாா்க்கண்டில் பேரணி:

ஜாா்க்கண்டின் சாய்பாசாவில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசிய அமைச்சா் அமித் ஷா, ‘‘மாநிலத்தின் இயற்கை வளங்களை முதல்வா் ஹேமந்த் சோரன் கொள்ளையடித்து வருகிறாா். மாநிலத்தில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் நோக்கில் பழங்குடியினப் பெண்களை வெளிநபா்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளது.

பழங்குடியினருக்குச் சொந்தமான நிலங்களை வெளிநபா்களுக்கு மாநில அரசு தாரைவாா்த்து வருகிறது. அதை மாநில அரசு உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும். முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com