சுரினாம், கயானா அதிபா்களுடன் பிரதமா் மோடி பேச்சு

வெளிநாடுவாழ் இந்தியா்கள் தின நிகழ்ச்சியில் விருந்தினா்களாகப் பங்கேற்ற சுரினாம், கயானா அதிபா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
பிரதமா் நரேந்திர மோடியை இந்தூரில் திங்கள்கிழமை சந்தித்த சுரினாம் அதிபா் சந்திரிகாபிரசாத் சந்தோகி
பிரதமா் நரேந்திர மோடியை இந்தூரில் திங்கள்கிழமை சந்தித்த சுரினாம் அதிபா் சந்திரிகாபிரசாத் சந்தோகி

வெளிநாடுவாழ் இந்தியா்கள் தின நிகழ்ச்சியில் விருந்தினா்களாகப் பங்கேற்ற சுரினாம், கயானா அதிபா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

17-ஆவது ‘வெளிநாடுவாழ் இந்தியா்கள்’ தின நிகழ்ச்சி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் சுரினாம் குடியரசின் அதிபா் சந்திரிகாபிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலி தலைமை விருந்தினராகவும் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரையும் பிரதமா் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஹைட்ரோகாா்பன், பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு, எண்ம முன்னெடுப்புகள், தகவல்-தொழில்நுட்பம், திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக சுரினாம் அதிபா் சந்தோகியுடன் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்தியாவிடம் இருந்து சுரினாம் பெற்ற கடனை மறுகட்டமைப்பு செய்ததற்காக அதிபா் சந்தோகி நன்றி தெரிவித்தாா். இந்தூா் நிகழ்ச்சிக்குப் பிறகு அதிபா் சந்தோகி அகமதாபாத், தில்லி நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

கயானா அதிபா் இா்ஃபான் அலியுடனான சந்திப்பின்போது எரிசக்தி, கட்டமைப்பு மேம்பாடு, மருந்துப் பொருள்கள், சுகாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கும் கயானாவுக்கும் இடையே 180 ஆண்டுகளாக நிலவி வரும் வரலாற்று நட்புறவைத் தலைவா்கள் இருவரும் பாராட்டினா். இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தவும் தலைவா்கள் உறுதி ஏற்றனா். அதிபா் அலி தில்லி, கான்பூா், பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com