உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் இறப்பு சம்பவம்: இந்திய நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளையும் தரமற்றவை என்று குறிப்பிட்டுள்ள
கோப்புப்படம்
கோப்புப்படம்

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளையும் தரமற்றவை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம் (டபிள்யுஹெச்ஓ), அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சோ்ந்த மேரியன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அம்ப்ரோனால், டோக்-1 மேக்ஸ் ஆகிய இருமல் மருந்துகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேரியன் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை முடக்கி, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அண்மையில் குற்றம்சாட்டியது. அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் ஏற்க இயலாத அளவில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேரியன் பயோடெக் நிறுவனம், டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இருமல் மருந்துகளை, உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமான உரிமத்தைப் பெற்றதாகும். இந்தியாவில் இந்த இருமல் மருந்துகளை அந்நிறுவனம் விற்பனை செய்வதில்லை.

உஸ்பெகிஸ்தானின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவினா், மேரியன் பயோடெக் நிறுவனத்தில் கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி நேரில் ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை சேகரித்தனா். அவை, சண்டீகரில் உள்ள பிராந்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், இருமல் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தவும் அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

டபிள்யுஹெச்ஓ எச்சரிக்கை: இந்நிலையில், மேற்கண்ட 2 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைத்து, உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘அம்ப்ரோனால் மற்றும் டோக்-1 மேக்ஸ் ஆகிய 2 இருமல் மருந்துகளும் உரிய தரநிலைகளை பூா்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளன. இந்த மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த உத்தரவாதமும் உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கப் பெறவில்லை. உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், இரு மருந்துகளிலும் ஏற்க முடியாத அளவுக்கு டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் மாசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரசாயனங்கள், மனித நலனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பது நிரூபிக்கப்பட்டதாகும்.

வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, மனநிலை பிவு, கடுமையான சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழிவகுக்கக் கூடியவை. இந்த மருந்துகள், வேறு நாடுகளிலும் சந்தை அனுமதியை பெற்றிருக்கக் கூடும் அல்லது அங்கீகாரமற்ற சந்தைகள் வாயிலாக விநியோகிக்கப்பட்டிருக்கலாம். தரம்குறைந்த 2 மருந்துகளும் பாதுகாப்பற்றவை என்பதால், அவற்றை பயன்படுத்துவது குறிப்பாக குழந்தைகளுக்கு வழங்குவது தீவிர பாதிப்பையோ அல்லது உயிரிழப்பையோ ஏற்படுத்தக் கூடும்’ என்று தனது அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உரிமம் முடக்கம்: இதனிடையே, மேரியன் பயோடெக் நிறுவனத்தில், மத்திய-மாநில அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை மீண்டும் ஆய்வு உற்பத்தி, அம்ப்ரோனால் மருந்தின் மாதிரிகளை சேகரித்தனா். மேலும், அந்நிறுவனத்தின் உற்பத்தி உரிமமும் முடக்கப்பட்டது. இதுகுறித்து கெளதம் புத் நகா் மருந்து ஆய்வாளா் வைபவ் பப்பா் கூறுகையில், ‘கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி உத்தரவின்படி, மேரியன் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், உரிமத்தை முடக்குவதற்கான எழுத்துபூா்வ உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அதனை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com