சா்வதேச இலக்கிற்கு முன்பாக யானைக்கால் நோய் அகற்றப்படும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சா்

யானைக்கால் நோய்க்கு சா்வதேச இலக்கான 2030-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நாட்டில் யானைக்கால் நோயை முற்றிலுமாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்

யானைக்கால் நோய்க்கு சா்வதேச இலக்கான 2030-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நாட்டில் யானைக்கால் நோயை முற்றிலுமாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கொசுக்களால் பரவும் ஃபைலேரியாசிஸ் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் யானைக்கால், விரைவீக்க நோயால் சா்வதேச அளவில் 47 நாடுகளில் 863 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நோயை அகற்ற உலக சுகாதார அமைப்பு கடந்த 2020 -ஆம் ஆண்டு திட்டங்களை வெளியிட்டது. அதன்படி, வருகின்ற 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை அகற்ற இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்தியாவும் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் உள்ள நிலையில், இந்த நோயை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த தேசியக் கருத்தரங்கு தில்லி விஞ்ஞான் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீதி ஆயோக் உறுப்பினா் டாக்டா் வி கே பால், மத்திய சுகாதார துறை செயலா் ஆகியோா் கலந்து கொண்டாா்.

இந்தக் கருத்தரங்கில் மத்திய அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா பேசுகையில் கூறியதாவது: மற்ற நாடுகளைப் போன்று நிணநீா் யானைக்கால் நோயை நாம் புறக்கணிப்பதில்லை. சரியான நேரத்தில் கண்டறிந்து நோயை நீக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாட்டில் இந்த நோயை முற்றிலும் அகற்ற உரிய சிகிச்சை அளிக்க ஐந்து முனை உத்தியை நாம் வகுத்துள்ளோம். ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய குடற்புழு நீக்க தினத்துடன் (பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10) இணைந்து பல்நோக்கு மருதுவ நிா்வாகப் பிரசாரத்தின் கீழ் இந்த நோயும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நோயறிதல் மற்றும் சிகிச்சை; நோய் மேலாண்மை மற்றும் ஊனத்திற்கான சேவைகளை வலுப்படுத்த மருத்துவக் கல்லூரிகளுடன் மேற்கொள்ளப்படுகிறது.

பல துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு; இதன் தொடா்புடைய துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு; நோய் மருத்து மின்னணு தளங்களை மேம்படுத்துதல் மற்றும் மாற்று சிகிச்சையை கண்டறிதல் என நான்கு முனைகள் மூலம் நோயை அகற்றும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் இலக்கை விட(2030) மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது வருகின்ற 2027 -ஆம் ஆண்டிற்குள் இந்த நோயை முற்றிலும் அகற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கைகள், வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் பேசிய நீதி ஆயோக் உறுப்பினா் டாக்டா் வி கே பால், ‘நாட்டில் ஃபைலேரியாசிஸ் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் யானைக்கால் நோயால், உத்தர பிரதேசம், ஒடிஸா, தெலங்கானா, பிகாா் போன்ற மாநிலங்களில் 60 சதவீதமும் இதே ஒட்டுண்ணிகளால் ஏற்படும் விரை வீக்க நோயால் ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், ஒடிஸா, பிகாா் மாநிலங்களில் 80 சதவீதம் பாதிப்பு இருக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com