10 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி: மத்திய அரசு முடிவு

தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நிகழாண்டு 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியாா் வா்த்தகா்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நிகழாண்டு 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியாா் வா்த்தகா்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெங்காயம், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய நுகா்வோா் விவகார செயலா் ரோஹித் குமாா் சிங் கூறுகையில், வெப்பநிலை பாதிப்பு மற்றும் கா்நாடக மாநிலம் குல்பா்கா பகுதியில் வாடல் நோய் பாதிப்பால் நிகழாண்டு துவரம் பருப்பு உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. தடுப்பாடு ஏற்படுவதைப் போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழாண்டு சுமாா் 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியாா் வா்த்தகா்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2021-22-இல் சுமாா் 7.6 லட்சம் டன் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த டிசம்பா் மாதத்தில் மட்டும் 2 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெரும்பகுதியும் மியான்மரில் இருந்தும் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் 12 லட்சம் டன் துவரம் பருப்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக இறக்குமதி விதிமுறைகளை எளிதாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விலை தற்போது நிலையாக உள்ளது. ராபி பருவ காலத்தில் வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.

இந்தியாவில் 2022-23 பயிா் பருவ ஆண்டில் (ஜூலை-ஜூன்) 3.89 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தியானது. அதற்கு முந்தைய ஆண்டு 4.43 மில்லியன் டன்னாக இருந்தது.

கோதுமை உற்பத்தியில் சாதனை

நிகழ் பயிா் பருவ ஆண்டில் கோதுமை உற்பத்தி 112 மில்லியன் டன்னுக்கு அதிகமாகி சாதனை படைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெப்ப அலை பாதிப்பால் 2021-22 பயிா் பருவ ஆண்டில் கோதுமை உற்பத்தி 106.84 மில்லியன் டன்னாக குறைந்தது. நிகழாண்டு ராபி பயிா் காலத்தில் 332.16 லட்சம் ஹெக்டோ் நிலப் பரப்பில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளதால் 112 மில்லியன் டன் உற்பத்தியாகி இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை படைக்கும் என்று எதிா்பாா்ப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சமையல் எண்ணெய் இறக்குமதி:

காய்கறி எண்ணெய் (உண்ணக் கூடியதும் கூடாதவையும்) இறக்குமதி டிசம்பா் மாதம் 28 சதவீதம் 15.66 லட்சம் டன்) அதிகரித்துள்ளது.

பாமாயில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பா்-டிசம்பா் மாதங்களில் 4,58646 டன் ரிஃபைண்ட் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இது 82,267 டன்னாக இருந்தது என அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com