
கிரண் ரிஜிஜு
கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதியை சேர்க்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியுள்ளார்.
கொலீஜியம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன், நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக் குழுவாகும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு தேவையான நீதிபதிகளை தேர்வு செய்து மத்திய சட்டத்துறைக்கு பரிந்துரைப்பதே இந்த குழுவின் பிரதான பணியாகும். கொலீஜியம் பரிந்துரைக்காமல் மத்திய அரசால் தன்னிச்சையாக நீதிபதிகளை நியமிக்க முடியாது.
இந்நிலையில், கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், மத்திய அரசின் பிரதிநிதிகளை கொலீஜியத்தில் நியமிக்க கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டத்துறை அமைச்சர் அனுப்பிய கடிதத்தில், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியங்களின் குழுக்களில் மத்திய அரசின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் அரசின் பிரதிநிதிகளை சேர்க்க அரசியல் சாசன நடைமுறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000: கர்நாடகத்தில் பிரியங்கா வாக்குறுதி!
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வின் தகவல் தொடர்புக்கு இந்த நடைமுறையை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சட்டத்துறை அமைச்சரின் கடிதத்திற்கு கொலீஜியம் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
மத்திய அரசின் இந்த கடிதத்திற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிவில் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவிட்துள்ளனர்.